"விஜய் பக்கம் கிறிஸ்துவ வாக்குகள் போவதை தடுக்கவே.. உதயநிதி முயல்கிறார்.." எச் ராஜா தாக்கு

post-img
மதுரை: பிராமணர்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜா, திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், கிறிஸ்துவர்கள் வாக்கு விஜய்க்குப் போகக் கூடாது என்பதால் அதைத் தடுக்கும் வகையிலேயே உதயநிதி செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் சாடினார். மதுரையில் பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் என்று தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவின் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் திமுகவை விமர்சித்த அவர், கிறிஸ்துவர்கள் வாக்கு விஜய்க்குப் போகக்கூடாது என்பதற்காகவே உதயநிதி முயன்று வருவதாகச் சொல்லி விமர்சித்தார். இந்த போராட்டத்தில் பேசிய ஹெச் ராஜா, "திராவிட இயக்கத்தினர் அன்னிய கைக்கூலிகளின் அடிமை போலவே இருக்கிறார்கள். அவர்கள் நமது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி சாதிய மோதலை உருவாக்கவே முயன்று வருகிறார்கள். இப்போது உதயநிதியைப் பாருங்கள். நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன் என்கிறார். அவர்களின் வீட்டிலேயே மாற்றம் நடந்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. தேசிய சிந்தனை இருப்போரைப் பார்த்தால் தேச விரோதிகளுக்குப் பிடிக்காது. நான் இங்கே ஈவெரா பேசியதைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். போலீசார் வழக்குப் போட்டால் அவர் மீது கேஸ் பேட்டடும். பிராமணர்களைக் கொல்ல வேண்டும் என இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த பெரியாரின் பிள்ளைகளின் ஆட்சி தான் இப்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது எனப் பெரியாரின் புத்தகத்தில் உள்ளதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன் நாட்டில் உள்ள அனைவரும் வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி அனைவருக்குமான மேம்பாடு என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால், இந்த திராவிட அரசு அதை ஏற்க மறுக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றார்கள். ஆனால், நாம் இப்போது பல நூறு செயற்கைக்கோள்களை ஏவுகிறோம். உதயநிதி திடீரென ஏன் நான் கிறிஸ்துவன் என பேசுகிறார் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்.. அரசியலுக்கு இப்போது விஜய் வந்திருக்கும் சூழலில், கிறிஸ்தவ சமுதாயத்தின் வாக்குகள் எல்லாம் அவருக்குப் போகக்கூடாது என்பதற்காகவே உதயநிதி நானும் கிறிஸ்தவன் என்று கூறுகிறார். இந்த உண்மையைப் பேச வழக்குப் போடப் போகிறேன் என்றால் தாராளமாகப் போட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் இப்போது பஞ்சாபை விட மோசமான நிலையில் போதை பழக்கம் இருக்கிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது" என்று பேசினார்.. தொடர்ந்து அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, "தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பாதுகாக்க பிசிஆர் சட்டம் இருப்பது போலப் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை.. பிராமணர்களுக்கு ஆதரவாக எல்லா சமூகத்தினரும் குரல் கொடுக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து யாரும் தவறாகச் சித்தரித்துப் பேசக்கூடாது என்கிறது தமிழ்நாடு போலீஸ்.. அந்த விவகாரத்தில் ஒரே ஒருவர் தான் குற்றவாளி என்றும் போலீசார் சொன்னார்கள். ஆனால், இப்போது அந்த வழக்கை மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வளவு நடந்தும் அண்ணா பல்கலைக்கழக செனட் குழுவில் உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்கவில்லை. பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செயல் பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனவர்கள் தான் இப்போதுள்ள அரசு. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம். தமிழகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. சாதி மத வேறுபாடு இல்லாமல் நம்முடைய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இரண்டு வருடம் ஆகிவிட்டது. இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. இதை எல்லாம் நாங்கள் சொன்னால் பாஜக காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறது என்பார்கள். ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே இது குறித்து விமர்சித்துள்ளனர். சென்னையில் ஒரு கல்லூரியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்து வரக் கூட அனுமதி மறுக்கிறார்கள். இவை எல்லாம் கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்று பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post