சோழிங்கநல்லூர் தான் டாப்! வாக்காளர்கள் எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருக்கும் தொகுதிகள் இவைதான்!

post-img
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக தொடர்கிறது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மிக அதிக, மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் எவை எவை எனத் தெரியவந்துள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒட்டுமொத்த பட்டியலை வெளியிட்டார். இதில் மொத்தம் 3.11 கோடி ஆண் வாக்காளர்களும், 3.24 கோடி பெண் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 9120 வாக்காளர்கள் இருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,45,184; பெண்கள் 3,45,645; மூன்றாம் பாலினத்தவர் 129 பேர். தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,505 ஆவர். அவற்றில் ஆண்கள் 86,456; பெண்கள் 90.045; மூன்றாம் பாலினத்தவர் 4 பேர். இதற்கு அடுத்த இடத்தில் இரண்டாவது மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. துறைமுகம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,980 ஆவர். (ஆண்கள் 92,615 பெண்கள் 86,296 மூன்றாம் பாலினத்தவர் 69). தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் 2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். 2025 ஆம் ஆண்டு சுருக்கமுறை திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர். அதில் 3 கோடியே 11 லட்சத்து 74,027 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்கள் மற்றும் 9120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்களுடன் கீழ்வேளூர் தொகுதி குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும் உள்ளதாக தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலில் 3740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டும் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post