திருச்செந்தூர் கோயிலில் விசேஷம்.. முதல் நாளே அரசு தந்த "கும்பாபிஷேகம்" சர்ப்ரைஸ்.. பூரித்த பக்தர்கள்

post-img
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்திட வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.. இது தொடர்பான பணிகளும் வேகம் எடுத்துள்ள நிலையில், பக்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்றை தமிழக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாக உள்ளது. எனவே, பக்தர்களின் வசதிக்காகவே, ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. கோயில் பணிகள்: அத்துடன், 15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அடுத்த வருடம் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.. இந்த கும்பாபிஷேக பணிகள் கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே சுமார் 100 கோடி செலவில் நடந்துகொண்டிருக்கின்றன.. அதேபோல, ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரத் திருப்பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன.. ராஜகோபுரத்தை முற்றிலும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், ராஜகோபுரத்தின் கீழ்த்தளப் பகுதிகள், தூண்கள் போன்றவற்றை புதுப்பிக்கும் பணிகளும் ஜரூராக நடைபெற்றன. இந்த வருடம் கும்பாபிஷேகம் நடப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவலை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சேகர்பாபு, கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளில் 20 பணிகளை ஹெச்.சி.எல். நிறுவனம் செய்து வருகின்றது. அதில் 3 பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்று உள்ளது. அதேபோல் ராஜகோபுரம் பணி முடியும் தருவாயில் உள்ளது. பக்தர்கள் அறை: வருகிற 20-ந் தேதி 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் படி பக்தர்கள் தங்க 122 அறைகள் கட்டப்பட உள்ளன. இதில் 56 பக்தர்கள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தோம். இந்தப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 43 பணிகள் என்றாலும் அவை ஒவ்வொன்றாக முடிந்ததும், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு திறப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். கோயில்களில் திருக்குறள் படிப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முழு பணிகள்: இப்போது HCL நிறுவனம் எடுத்துக்கொண்ட பணிகள் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டிவிட்டது.. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.. இப்பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.. முழு பணிகளும் முடிவடையும்போது வடக்கே வாரணாசி போன்ற திருக்கோயில்களில் உள்ளது போல் பக்தர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி இருக்கும்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post