பெருங்களத்துரை கடப்பது பெரும்பாடு... மொத்தமாக வரும் சென்னை மக்கள்.. ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்

post-img
சென்னை: அரையாண்டு பள்ளி விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்க பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 23ம் தேதி முடிந்தது. அதன்பிறகு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் புத்தாண்டு நாளான இன்று பலர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு ஜிஎஸ்டி சாலை வழியாக வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக திருச்சி முதல் தாம்பரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சமயபுரம் தொடங்கி பரனூர் வரை எல்லா சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அதிக அளவில் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. சென்னைக்கு இன்று மாலை முதலே ஏராளமானோர் திரும்பி வந்த காரணத்தால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலை கடும் நெரிசலில் சிக்கி தவித்தது. இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் வந்ததால், சிங்க பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் இறக்கும் இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பதித்தது. மிகப்பெரிய சாலையில் 6 லேன்களில் வரும் வாகனங்கள், பெருங்களத்தூர் மேம்பாலம் முடிந்து இரும்புலியூர் பாலத்தை கடக்கும் போது இருவழியாக குறுகிய அளவில் இருப்பதால் நெரிசலில் சிக்கி தவித்தன. அதேநேரம் இரும்புலியூர் பாலம் பகுதியில் வேலை நடப்பதால் சாலை குறுகியதாக இருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. அதேபோல் செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரை சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டார்கள். நாளை காலை வரை வாகனங்கள் அதிக அளவில் வரும் என்பதால் நெரிசல் தொடர்ந்து அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post