#Getoutravi அத்துமீறும் ஆளுநர்.. காப்பாற்றும் அதிமுக-பாஜக! ஒரே இரவில் முளைத்த போஸ்டர்கள்! திமுக மாஸ்

post-img
சென்னை: ஆளுநர் உரையைப் படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டசபையில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆளுநரை கண்டித்து இன்று திமுக போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில், #கெட்அவுட்ரவி என்ற ஹேஷ்டேக்குடன் அத்துமீறும் ஆளுநர், அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி என சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பது மரபு. இதையடுத்து இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதியான நேற்று நடைபெறும் எனவும் ஆளுநர் ஆர்என் ரவி சட்டப்பேரவை தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அப்போது சபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படாத நிலையில், தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அவையை விட்டு ஆளுநர் வெளியேறினார். ஆளுநர் ஆர்என் ரவி: அவையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஆளுநர் கூறியதாகவும், இது தொடர்பாக சபாநாயகர் முதலமைச்சரிடம் கூறியும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் வேதனையுடன் ஆளுநர் வெளியேறியதாக சென்னை ராஜ் பவன் விளக்கம் அளித்து இருந்தது. 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரையே ஆளுநர் புறக்கணித்தது அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் ஆளுநர் உரை தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. திமுக போராட்டம்: இதனையடுத்து ஆளுநருக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை அந்த கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி வெளியிட்டு இருந்தார். ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள்: இந்த நிலையில் ஒரே நாள் இரவில் சென்னையில் ஆளுநர் மற்றும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கெட் அவுட் ரவி என்ற ஹேஷ் டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பின்னணியில் ஆளுநரும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசிக் கொள்வது போலவும், அண்ணாமலை ஒளிந்து இருந்து பார்ப்பது போலவும் அந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி: “ தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநர்.. அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி” என்றும், “சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன்.. நீங்க நேக்கா வெளியே போயிடுங்க” என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போலவும், 'சூப்பர்யா நீதாயா உண்மையான விசுவாசி” என ஆளுநர் சொல்வது போலவும் இருக்கும் அந்த போஸ்டர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது. கவனம் பெறும் போஸ்டர்கள்: திமுக சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளன. சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரியான போஸ்டர் சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பதும் கவனிக்க வைத்துள்ளது. மேலும் இந்த போஸ்டரை திமுகவினரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post