சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்களின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. சில மாதங்களாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது கண்களில் ஏதேனும் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் கண்கள் கூசுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கேள்வியில் உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் இளவயதுக்காரரா, வயதானவரா என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்னைக்கான காரணமும் வேறுபடும்.
இளவயதினருக்கு கண்களில் 'ரீஃப்ராக்டிவ் எரர்ஸ்' (Refractive errors) எனும் பார்வை குறைபாடுகள் இருக்கலாம். கிட்டப்பார்வை அல்லது துரப்பார்வை பிரச்னைகள் இருக்கலாம். தவிர அஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) எனப்படும் கருவிழிக் கோளாறு போன்றவை இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல வாகன வெளிச்சத்தால் கண்களில் கூச்சம் ஏற்படலாம். இந்த அறிகுறியை உணர்ந்தால் கண் மருத்துவரை அணுகி, பவர் செக் செய்து, கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர, இன்று நிறைய பேர் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்யும்போது கண்களை இமைக்க மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கண்களில் வறட்சி (Dry Eyes) ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையாலும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்கள் கூசும்.
வயதானவர்களுக்கு வெளிச்சத்தைப் பார்க்கும்போது இப்படி கண்களில் கூச்சம் ஏற்பட்டால் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு இருக்கலாம். கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, அதை உறுதிசெய்து அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.