அமெரிக்காவில் நியூபிரன்சுவிக் நகரின் பெரிய மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் தன்னுடைய இதய துடிப்பை எதிரில் இருந்த திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
குட்டையும் நெட்டையுமாக சீராக இருக்க வேண்டிய அந்த அலை வரிசை தாறுமாறாக இருந்தன.
நேற்று இரவிலிருந்து வாந்தியும், வயிற்றுப்போக்கும் தொடர, தண்ணீர் கூட வயிற்றில் நிற்க்கவில்லை. சோர்ந்து போயிருந்த கண்ணபிரான் மனத்திரையில் கடந்த இரண்டு நாட்கள் மெல்ல நகன்று கொண்டிருந்தன.
நியூஜெர்சி மாநிலத்தில் ஓடுகின்ற ராரிடன் கால்வாயின் ஒரு கரையை பொது மக்கள் நடப்பதற்கு, ஓடுவதுற்கு, மிதி வண்டி விடுவதற்கென்று மாநில அரசாங்க நிறுவனமொன்று செம்மை படுத்தி வைத்துள்ளது. கால்வாயின் இரு புறமும் அடர்ந்த மரங்கள். ஆங்காங்கே புள்ளி மான்கள் செப்டம்பர் மாத இதமான வெயிலை ரசித்துக் கொண்டிருந்தன. கால்வாயில் தண்ணீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சில ஆமை குட்டிகள் கால்வாயில் விழுந்த மரங்களின் மேலேறி கண்ணாமூச்சிவிளையிட்டில் மும்முரமாக இருந்தன. அந்த அருமையான இயற்கையை ரசித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார் கண்ணபிரான்.
அவரது கிராமத்துக்கு அருகில் இருக்கும் சின்னமனுர் ஆற்றங்கரைகளின் பின்னணி காட்சி போல் இருந்தது ராரிடன் கால்வாயும் அந்த சூழலும்... சற்று வேகமாக நடந்து கொண்டிருந்தார் கண்ணபிரான்.
வெள்ளை காளான்கள்...
கண்ணபிரானின் மன ஓட்டத்தை தடுப்பது போல் அங்கு வந்த மருத்துவர் அவர் கடந்த இரண்டு நாள்களில் உண்ட உணவு, என்ன குடித்தார் போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார். தொந்தரவுக்கு மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவசர பிரிவுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர் ராபர்ட் கண்ணபிரானுக்குச் செய்யப்பட இரத்த பரிசோதனை ரிப்போர்ட்டை கவனமாக படித்தார். அனேகமாக அனைத்து அளவுகளும் தவறாக இருந்தன. குறிப்பாக, AST என்கிற கல்லீரல் நலனைக் குறிக்கும் நொதி (Enzyme) மிக அதிகமாக இருந்தது. சாதாரணமாக 33 யூனிட் இருக்க வேண்டிய AST அளவு 50000 யூனிட் இருந்தது. கல்லீரல் பாதிப்பு தீவிரமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு கல்லீரல் ஸ்பெசிலிஸ்ட் டாக்டர் சலீம்க்கு தகவல் சொல்லப்பட்டது.
கண்ணபிரான் சிந்தனை முந்தா நாள் நடந்த சம்பவங்களை மீண்டும் அசை போடத் தொடங்கியது...
ராரிடன் கால்வாயில் பாதி தூரம் போனதும் அருகில் இருந்த ஓக் மரத்தின் அடியிலிருந்த அந்த வெள்ளை காளான்கள் அவரது நடையை நிறுத்தியது. அவை அவரது கிராமத்துக் காடுகளில் வரும் அதே வகை காளான்கள். சவ்வு மிட்டாயை பார்த்த கிராமத்து குழந்தை போல் அவருக்கு ஏக குஷி!
மெல்ல அயர்ந்து கண்ணபிரானுக்கு தூக்கம் வரும் நிலையில் டாக்டர் சலீம் வந்தார்." கண்ணபிரான், இன்று மாலை எடுத்த இரத்தபரிசோதனையில் AST லெவல் இன்னும் குறையவில்லை. அடிப்படை புரத உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் உங்களது கல்லீரல் செல்கள் செயலற்று, இறக்கும் தருவாயில் இருப்பதாக ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுகிறது. நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது ஆனால் மேல் சிகிச்சைக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். தைரியமாக இருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார் டாக்டர் சலீம்.
அந்த ரிப்போர்ட்டை படித்த கண்ணபிரானுக்கு, குளிர்ந்த அறையிலும் வியர்வை முதுகை நனைத்தது. ராரிடன் கால்வாயில் பறித்து வந்து சமைத்து சாப்பிட்ட அந்த வெள்ளை காளான்கள் அமானிடாபலாய்ட்ஸ் (Amanita phalloids) என்றும் அதிலிருக்கும் விஷம் அமானிட்டின் தான் அவரின் வாந்தி, வயிற்றுப் போக்கு, அதை தொடர்ந்த கல்லீரல் பாதிப்புக்கும் காரணம் என்று அந்த ரிப்போர்ட் தெளிவாக சொன்னது.
ராரிடன் கால்வாய்காடும் கற்பனைகளும்! நிஜம் தெளிவோம்... புதிய தொடர்ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2000 பேர் அமெரிக்காவில் இந்த விஷகாளான்கள் தின்று மருத்துவமனைக்கு வருவதாகவும் அதில் 1000 பேர் இறப்பதாகவும் கூகுள் சொன்னது. "அட நாராயணா நம்ம கத அவ்வளவு தானா?" கண்ணபிரானுக்கு நிலவரம் புரிந்தது.
"ஒரு வேளை சோலி முடிஞ்சா பொணத்தை ஊருக்கு கொண்டு போய் அங்க சுடுகாட்டுல எரிக்கனும்டா" என்று அங்கிருந்த தன் தங்கை மகனுக்கு ஆணையிட்டார் கண்ணபிரான். சாவை பற்றி பயந்து சொன்ன வார்த்தைகளாக அவை தெரியவில்லை. தனது மண்ணின் மேல் காதல் அவருக்கு.
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா, தைரியமாஇருங்க" என்று நா தழுதழுக்க சொன்னான் தங்கை மகன்.
கண்ணபிரானின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு கீழ், பெரியார் பாசன வயல்வெளிக்கு மேற்கில் ஒரு சிறிய கிராமம். புரட்டாசி, ஐப்பசி மாத பருவ மழை காலத்தில் பச்சை கம்பளம் போர்த்தினாற்போல் கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஒரே பசுமை. இருங்கு சோளமும் (கரும் சிவப்பு வகை), சாமையும், வரகும் மானாவாரி காடுகளில் செழிப்பாக வளர்ந்து இருக்கும். ஒரு சில வருடங்களில் அதிக மழை காரணமாக தரையில் ஊற்று எடுத்து, கிணறுகளில் நீர் மருகி ஓடும். அது ஒரு அதிசய காட்சி, அனுபவம்!
அந்த கால கட்டத்தில் ஆங்காங்கே நிறைய காளான்கள் முளைப்பதுண்டு. ஆரம்பத்தில் ஈர மண் உப்பிக் கொண்டு விரியும், பின் மறுநாளே காளான் மொட்டுகள் தரையை பிளந்து வெளிவரும். கண்ணபிரானின் தாத்தா காலை வேலையில் காடுகளுக்கு சென்று காலை கடன்களை முடித்து கருவேலம்குச்சியில் பல் துலக்கிக் கொண்டு வரும்போது கையில் காளான்களோடு வருவார். அடுத்த அரை மணி நேரத்தில் துவரம்பருப்பு சாம்பாருக்கு அந்த காளான்கள் மணம் சேர்த்துக் கொண்டு இருக்கும்.
யார் அந்த காளான்களுக்கு விதை இட்டது, எங்கிருந்து அவை வருகின்றன என்றெல்லாம் கிராமத்தில் யாருக்கும் தெரியாது. யாரும் அதை பற்றி யோசனை செய்ததாகவும் தெரியவில்லை. இளங்கலை தாவரவியலில்பூஞ்சை பற்றிய பாடத்தில் காளான்கள், பாசிடியோமைசிட்ஸ் (Basidiomycetes) என்ற குடும்பத்தை சார்ந்தது என்றும் அவை மெல்லிய வலை பின்னைல்களால் தரையின் கீழ் பல கோடி வருடங்கள் வாழ்ந்து வருவதாகவும், அவ்வப்போது இனப்பெருக்கத்துக்காக தரைக்கு மேல் வருவதாகவும் கண்ணபிரான் கற்றுக்கொண்டார்.
தொட்டாலே சாவு நிச்சயம்...
கொடைக்கானலுக்கு மேற்கே பேரிஜம் ஏரிக்கு பக்கத்தில் உள்ள ஊசி இலைக்காட்டின் தரையில் வானவில்லின் வண்ணத்தில் காணப்படும் பல வகையான காளான்களை பேராசிரியர் ஜான்ஜெபராஜ் அறிமுகம் செய்திருந்தார். அனைத்தும் மிக கொடிய விஷத்தைக்கொண்டதென்றும், தொட்டாலே சாவு நிச்சயம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
"ஆனால் நாம் சாப்பிட்டது வெள்ளை காளான் தானே, நமக்கு ஏன் இந்த கெட்ட காலம். அரளி கொட்டை தின்று கிராமத்தில் பல பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள், ஆனால் ஒருவர் கூட காளான் தின்று இறந்தது இல்லையே." விபரம் தெரிந்தால் கிராமத்து மக்கள் நம்மை காரிதுப்புவார்களே".
"தன்னம்பிக்கை வேண்டும் தான் ஆனாலும் சற்றும் பயமில்லாத தன்னம்பிக்கை ஆபத்தல்லவா?"
இந்த காளானை சாப்பிட வேண்டாமென்று தங்கை மகன், தோழி நாச்சியார் சொல்லியும் கேட்காமல் சாப்பிட்டோம், ஏன்?"
ஒன்று மட்டும் புரிந்தது கண்ணபிரானுக்கு, அதாவது, படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு அதிகமில்லை. அதிகம் படிக்காத கிராமத்தானுக்கு விஷ காளான் பற்றிய பகுத்தறிவு உள்ளது. ஆனால் தான் அதிகம் படித்தும் ஒரு முட்டாள் என்று நொடிந்து போனார்.
காளான் விஷமுறிவுக்கு மருந்து ஒன்றை ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்து கொண்டிருந்தது. அந்த தகவல் தெரிந்த டாக்டர் சலீம் அந்த மருந்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார். மறுநாளே அந்த மருந்து இங்கு வந்து சேரும் என்ற தகவலையும் தெரிவித்தார். அமெரிக்க மருத்துவ மனையாயிற்றே, இங்கே எல்லாம் சாத்தியம்.
இதற்கிடையில் இறந்து போன ஒருவரின் கல்லீரலை பொருத்தும் ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. நேற்று இரவு கார் விபத்தில் உயிர் இழந்த ஒருவரது கல்லீரல் கண்ணபிரானுக்கு பொருத்தமாக இருக்குமென்று டெஸ்ட் செய்து கொண்டிருப்பதாகவும் அது பொருந்தினால் மறுநாள் அறுவை சிகிச்சை இருக்கும் என்றும் சொல்லி விட்டு போனார் டாக்டர் சலீம். உடனிருந்தஉறவினர்களின் முகத்தில் கவலை ரேகை ஓடியது. நாச்சியார் கண்கள் கலங்கின.
"இந்த அமானிட்டின் என்ன பெரிய பிஸ்தாவா? ஏதோதோ அதிசயங்களை நடத்தும் இந்த உடலில் அமானிட்டினை எதிர்த்து துவசம் செய்யும் சக்தி இல்லையா? இத்தினியூண்டு காளானுக்கு இவ்வளவு திமிரா?" கோபம் வந்தது கண்ணபிரானுக்கு.
யோசனை செய்து பார்த்தால் காளான்களும் ஒரு உயிரினம், அவைகளும் இனப்பெருக்கம் செய்து பிழைக்க வேண்டுமல்லவா? பரிணாம வளர்ச்சியில் காளான் தற்காப்புக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட விஷம் தான் அமானிட்டின் என்று தனக்கு தானே விளக்கம் கொடுத்து சற்று அமைதியானார்.
இதய துடிப்பில் முன்னேற்றம் இல்லை. உடல் வலிக்கவில்லை. மனது லேசாக இருந்தது. கண்ணில் தூசி விழுந்தது போல் மங்கலாக இருந்தது. ஜன்னலின் மறுபுறம் தாத்தா தெரிந்தார். தும்பைப் பூ போல் வெள்ளையான வேட்டி, பாகவதர் துண்டு, நாமம் இட்டிருந்தார். வாழ்நாளெல்லாம் புகையிலை மென்று இறுதியில் புற்று நோய் வந்து இறந்து விட்டார். அவருக்கென்ன இங்கு வேலை? மூன்றாவது மாடியில் இருக்கும் இந்த அறையின் ஜன்னலில் எப்படி நிற்கிறார்? கவலையுடன் பார்த்து கை அசைத்தார். 'பட்ட கஷ்டம் போதும்யா, வந்துரு என் கூட' என்று சொல்வது போல் இருந்தது.
இருதயம் நின்று போய் மனிதன் இறந்து விட்டாலும் மூளை மட்டும் இன்னும் சில நிமிடங்கள் வேலை செய்வதாக சமீபத்தில் படித்தது கண்ணபிரானுக்கு நினைவு வந்தது. அந்த தருணத்தில், இறந்து கொண்டிருக்கும் அந்த மனிதனின் இனிமையான, பிடித்த சம்பவங்கள் மனத்திரையில் சில நிமிடங்கள் ஓடும் என்றும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. "அப்படியானால் நாம் இறந்து கொண்டிருக்கிறோமா? அதனால் தான் தன் சொந்த ஊர், இளமை கால நினைவுகள் மனத்திரையில் வருகின்றனவோ?" யோசிக்க சக்தியில்லை கண்ணபிரானுக்கு.
கருடன் கண்ணபிரான் இருந்த மருத்துவமனையை வட்டமடித்தது. எங்கோ இருந்து ஆந்தை ஒரே ஒரு முறை கூவியது. அவரது கிராமத்து வழக்கப்படி ஆந்தை ஒரே ஒரு முறை கூவினாள் ஊரில் எழவு நிச்சயம். வாடியிருந்த அவர் முகத்தில் திடீரெனெ ஒரு பொலிவு.
கண்ணபிரான், கண்ணபிரான் என்று டாக்டர் சலீம் தொலை தூரத்திலிருந்து கூப்பிடுவது போல் கேட்டது. கண்கள் பஞ்சு போர்த்தியது போல் மங்கலாக இருந்தது. கையின் ரத்த குழாயில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வெள்ளை திரவத்தைக் காட்டி "இது தான் நான் வரவழைத்த ஆஸ்திரேலியா மருந்து. கடந்த இரண்டு நாள்களில் உங்கள் கல்லீரல் நலனில் பெரிய முன்னேற்றம்" என்றார் டாக்டர் சலீம்.கண்ணபிரான் உடல் நலம் சரியாகி சொந்த ஊருக்கு செல்ல அங்கு குடும்பத்தினர் பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். "மாப்ளே உங்களுக்காக காளான் பிரியாணி ஸ்பெஷல்" என்றார் மாமா. குடும்பத்தினர் அனைவரும் சிரிக்க, அந்த குதூகலத்தில் மாலை அணிந்து போட்டோவில் இருந்த தாத்தாவும் கலந்து கொண்டார்.