என் குழந்தை எது கொடுத்தாலும் அப்படியே டிபன் பாக்ஸுடன் கொண்டு வருகிறது என்ற கவலையில் இருக்கும் தாய்மார்களே! கவலைவிடுங்கள் , எந்த உணவாக இருந்தாலும் நாம் வெவ்வேறு வகைகளில் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.
அதை அப்படியே உடும்பு போல் பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த உணவுகளை செய்து முடிங்க. குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பார்க்கலாம்.
in
அதில் வல்லாரை கீரை முக்கியமானது. இந்த வல்லாரை கீரையை கொண்டு துவையல், சட்னி, கீரை கடையல், கீரை தோசை, இட்லி உள்ளிட்டவைகளை செய்யலாம். அதில் முதலில் வல்லாரை கீரை தோசையை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
வல்லாரை கீரை பாக்கெட் 2
பூண்டு- 4 பல் இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 3
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு
வல்லாரை கீரையை ஆய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான இடங்களில் அதை ஆய்ந்து பாக்கெட்டுகளில் போட்டு விற்கிறார்கள். அது போல் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீரை பாக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
2 பாக்கெட் கீரையை நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் பூண்டு போட்டு பொரிய விடவும். இதையடுத்து இஞ்சி போட்டு வதங்கியவுடன் பச்சை மிளகாய் அதன் பின்னர் கீரை, கொத்தமல்லியை போட்டு லேசாக வதக்கவும், சுருண்டு வதங்கியவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஆறவிட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
தோசை மாவில் ஏற்கெனவே உப்பு சேர்த்திருப்போம். எனவே கீரையில் குறைந்த அளவில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவை ஒரு முறை நன்கு அடித்து கரைத்து கொண்டு அதில் அரைத்த கீரை கலவையை போட்டு நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் அதில் சீரகம் சேர்த்து கலந்து விடலாம்.
பின்னர் தோசை வாணலியை சூடாக்கி அதில் இந்த மாவை ஊற்றி எண்ணெய் அல்லது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து மொறுமொறு என வெந்ததும் திருப்பி போடவும். இது போல் இந்த வல்லாரை கீரையில் வாரத்திற்கு இரு முறை அல்லது 3 முறை ஏதாவது ஒரு உணவை செய்யலாம்.
இந்த கீரையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இரவு நேரத்தில் கீரை சாப்பிட்டால் ஜீரணமாகாது என்பார்கள். எனவே காலை வேளையில் வல்லாரை கீரை தோசையை சுட்டுக் கொடுக்கலாம். மதியம் பள்ளிக்கு கூட இந்த தோசையை சற்று கனமாக ஊற்றி மிளகாய் பொடியோ அல்லது வெங்காயம், தக்காளி சட்னியோ சேர்த்து கொடுக்கலாம்.