தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் அன்றாட பணிகளை எளிமையாக்குவதற்காக பல்வேறு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கும் சாதனம் என்றால், ஸ்மார்ட் வாட்ச்-களை கூறலாம்.
தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாக நமக்கு கிடைத்த பயனுள்ள பொருட்களில் ஸ்மார்ட் வாட்ச்சும் ஒன்று. சாதாரணமாக மெசேஜ் செய்வதில் தொடங்கி, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு என பல வகைகளில் உதவியாக இருப்பது ஸ்மார்ட் வாட்ச் ஆகும். குறிப்பாக நம்மை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள ஸ்மார்ட் வாட்ச் மிக உதவியாக இருக்கிறது.
நம் உடலில் இதயத்துடிப்பு குறைந்தாலோ அல்லது அதிகரித்தலோ ஸ்மார் வாட்ச்சுகளில் உள்ள அமைப்பு, அவசர உதவி எண்ணுக்கும் தெரியப்படுத்தும். இது மட்டுமல்லாமல், அன்றாடம் நமது உடல் நிலையை கண்காணித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.
இதயத்துடிப்பு கண்காணிப்பு : நம் இதயத்துடிப்பு சீரான அளவில் இருக்கிறதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் ஸ்மார்ட் வாட்சில் உள்ளது. பொதுவாக நம் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இதயத்துடிப்பு செல்லும் நிலையில் இது நமக்கு தெரியப்படுத்தும்.
ஃபோன் இல்லாமல் உதவி : பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச் என்பது ஸ்மார்ட் ஃபோனுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், தனித்து செயல்படும் அளவிலும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளது. அவசர உதவிக்கு ஃபோனை தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. ஸ்மார்ட் வாட்சில் ஒற்றை பட்டனை அழுத்துவதன் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். இது தவிர உங்கள் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் உரிய விவரங்களுடன் தானியங்கி முறையில் தகவல் அனுப்பும்.
முக்கியமான விஷயங்களுக்கு நினைவூட்டல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க சில வாழ்வியல் நடவடிக்கை அவசியமானவை. ஆனால் வேலை பளுவில் நாம் அதை மறந்து விடுகிறோம். போதிய இடைவெளியில் எழுந்து நிற்பது, நடப்பது மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது, தண்ணீர் அருந்த, உணவருந்த சரியான நேரத்தில் நினைவூட்டுவது என ஸ்மார்ட் வாட்ச் உதவியாக இருக்கும்.
நிம்மதியான தூக்கம் : நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம், அது தரமான தூக்கமாக அமைகிறதா என்பதை இது கண்காணிக்கும். தூங்கும் போது நம் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் சப்ளை போன்றவற்றை இது கணக்கிடும். மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளும் கணக்கீட்டை போல இது துல்லியமாக இருக்கும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கலாம் : நம் உடலிலும், மனதிலும் உள்ள அதிகப்படியான ஸ்ட்ரெஸ் காரணமாக உடல்நிலை பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. செரிமான பிரச்னைகள், கவனச்சிதறல், பதற்றம் உள்ளிட்டவை இதன் விளைவுகள் ஆகும். ஆனால், ஸ்ட்ரெஸ் அளவை ஸ்மார்ட் வாட்ச் கட்காணித்து, நீண்ட மூச்சு இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்ய அறிவுறுத்தும். இத்தகைய திறன்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ளது.