பனங்கிழங்கு - இது ஒரு சீசன் கிழங்கு.. மார்கழி மாசம் முதல் மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்பார்கள்.. இந்த காலக்கட்டங்களில் அதிகமாகவே பனங்கிழங்கு கிடைக்கும்.. விலையும் மலிவு.
வைட்டமின் பி மற்றும் சி இந்த கிழங்கில் உள்ளது.. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகள் உள்ளதாம்.. 1 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்து உள்ளது.
பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.. அதனால்தான், உடல் பலவீனமாக இருப்பவர்கள், இந்த கிழங்கை சாப்பிடுவார்கள்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.. உடல் எடை மெலிந்தவர்கள், எடை கூட வேண்டுமானால், இந்த பனங்கிழமை சாப்பிடலாம். இந்த கிழங்கு ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்ககூடியது.
ரத்த விருத்தி: ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த சோகை தீரும். அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மருந்து உணவு இந்த கிழங்கு. இந்த கிழங்கு குளிர்ச்சி தன்மை உடையது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கிழங்கு நல்லது.. பொதுவாக, மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகள் கெடுதி என்பார்கள்.. ஆனால், இந்த கிழங்கை சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவு சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது.. அதேபோல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை கூட்டச்செய்கிறதாம். அதனால், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது இந்த கிழங்கை சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் புட்டு செய்வார்கள்.. அவியல் செய்வார்கள்.. வடை செய்வார்கள்.. பாயாசம் செய்வார்கள்.. தோசை செய்வார்கள்.. உப்புமா செய்வார்கள்.
தோசை, பாயாசம்: சுவைக்கேற்றபடி இன்னும் எத்தனையோ வகைகளில் செய்து சாப்பிடலாம். ஆனால், மருத்துவ பலன்களுக்கு சில வழிகளை பயன்படுத்தி மட்டுமே உணவாக எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து இடித்து மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது துண்டுகளாக நறுக்கி வெயிலில் 3 நாட்களுக்கு காய வைத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மாவு மட்டுமே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தருகிறது.
இந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான பலன் கிடைக்கும்.. இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். இந்த பனங்கிழங்கு மாவுடன், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடலாம். இந்த மாவில், கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம்.. ஆனால், எப்போதுமே பனங்கிழங்கு செய்தால், அதில் நான்கைந்து மிளகு சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், இந்த கிழங்கில் சற்று பித்தம் உள்ளது.
பித்தம் - வாயு: அதேபோல, பனங்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம். அப்படியிருந்தால், பூண்டு சேர்த்து கொள்ளலாம். இந்த பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகையை நீக்கி ரத்த விருத்தியை அதிகரிக்கிறது.. ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்.
பொதுவாகவே பனை மரத்தை கற்பக விருட்சம் என்பார்கள்.. அந்தவகையில், பனங்காய் மட்டுமல்ல, பனங்காயின் விதையும்கூட, மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.