பாலை ஃபிரிட்ஜில் வைப்பதாக இருந்தாலும் சரியாக ஸ்டோர் செய்யவில்லை எனில் எளிதில் கெட்டுப்போய்விடும். குறிப்பாக கோடை காலத்தில் இந்த பிரச்சனை அடிக்கடி வரலாம். அப்படி அடிக்கடி பால் கெட்டுப்போகிறது எனில் அதை வீணாக கீழே ஊற்றுவதை தவிர வேறு வழி இருக்காது.
அவ்வாறும் ஒரு பாக்கெட் பாலை கீழே ஊற்றுவது என்பதும் சிரமமான விஷயம்தான். இனி அந்த கவலை வேண்டாம். நாங்கள் சொல்லும் இந்த டிப்ஸை பின்பற்றினால் ஒரு சொட்டு பாலை கூட வீணடிக்காமல் சூப்பரான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆம்... அதாவது திரிந்த பாலை வைத்து வீட்டிலேயே பனீர் செய்யலாம். அதற்கான டிப்ஸ் இங்கே...
எலுமிச்சை - பால் கொதிக்கும் போதே திரிந்து வருவது போல் இருந்தால், உடனே வீட்டில் வைத்திருக்கும்2 எலுமிச்சையை இரண்டாக பிளந்து அதன் சாறை பிழிந்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிது தண்ணீர் சேர்க்கவும். இப்போது கேஸில் வைத்துள்ள பாலில் மெதுவாக ஊற்றி கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். இப்படி செய்வதால் பால் நன்றாக திரிந்து வரும். இப்போது பாலை வடிகட்டி கொண்டு வடிகட்டி, இந்த சீஸை ஒரு மஸ்லின் துணியில் கட்டி, கனமான பொருளால் அழுத்தமாக வைத்து சிறுது நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றி கெட்டியான பனீர் கிடைக்கும்.
வினிகர் - உங்கள் வீட்டில் எலுமிச்சை இல்லை என்றால், வினிகர் பயன்படுத்தி பாலில் இருந்து பனீரை எடுக்கலாம். முதலில் பால் சூடானதும், ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை ஒன்று முதல் இரண்டு மூடிகள் ஊற்றி, அதில் தண்ணீர் சேர்க்கவும். இப்போது இந்த தண்ணீரை பாலுடன் சேர்த்து கிளறவும். பால் நன்றாக கொதித்து பனீர் ஒரு பக்கம் திரிந்து வரும். இப்போது அதை ஒரு சல்லடை கொண்டு வடிகட்டவும். வினிகரின் வாசனை பிடிக்கவில்லை என்றால், பனீரைக் கழுவி வடிகட்டவும். பின்னர் அதை ஒரு துணியில் கட்டி தொங்கவிடவும். தண்ணீர் முழுவதும் வடிந்துவிடும். பிறகு கெட்டியான பனீர் தயார்.