ஒருவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் வயிற்றின் ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போதைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், ஒவ்வொருவரும் பலவிதமான செரிமான பிரச்சனைகளை அன்றாடம்சந்தித்து வருகிறோம். அதில் பெரும்பாலானோர் அனுபவிப்பது மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்புகள் போன்றவை.
இந்த பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது செரிமான மண்டலம் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது தான். செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகப்படியான நச்சுக்கள் இருந்தாலும் பாதிக்கப்படலாம். மேலும் நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலத்தில் ஜீரணிக்கப்பட்டு, அதன் கழிவுகள் வெளியேற்றப்படுவதால், செரிமான மண்டலத்தில் நச்சுக்கள் சேர நிறைய வாய்ப்புள்ளது.
இப்படி சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும். அதற்கு நாம் உண்ணும் சில உணவுகளே உதவி புரியும். குறிப்பாக பழங்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கீழே வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
ஆப்பிள்
ஆப்பிளில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கூடுதலாக, ஆப்பிளில் பெக்டின் உள்ளது. இது ப்ரீபயோடிக்காக செயல்படுகிறது. இந்த பெக்டின் உடலால் ஜீரணிக்க முடியாததால், இது குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உடைக்கப்படுகிறது. இதனால் இரைப்பை குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை தினமும் சாப்பிடுங்கள்.
பப்பாளி
பப்பாளி அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் சுவையான பழம். பப்பாளியில் பாப்பைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. நீங்கள் ஏற்கனவே செரிமான பிரச்சனைகளை சந்திப்பவரானால், உணவு உண்பதற்கு முன் பப்பாளியை சிறிது சாப்பிடுங்கள்.
இது செரிமான செயல்முறையைத் தூண்டி, உண்ணும் உணவுகளில் திறம்பட உடைக்கப்பட்டு ஜீரணிக்கப்படும். முக்கியமாக தினமும் பப்பாளியை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றிவிடும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கின்றன. ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறியின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீங்கள் வயிற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிடலாம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் மற்ற பழங்களை விட அதிகமாக டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு வேண்டிய நார்ச்சத்தி 12 சதவீதம் கிடைக்கும், குடலியக்கம் மேம்படும் மற்றும் மலச்சிக்கலின் அபாயம் குறையும். மேலும் கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் செரிமான பிரச்சனைகளின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். முக்கியமாக கொய்யாப்பழம் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரியும்
.
ஸ்ட்ராபெர்ரி
கண்ணைப் பறிக்கும் நிறத்தைக் கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குடலியக்கத்தை தூண்டிவிட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன. கூடுதலாக ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் (வைட்டமின் பி9) அதிகமாக உள்ளன. இந்த ஃபோலேட் செரிமான அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவித்து, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆகவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கவும், வயிற்றை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள நினைத்தால், ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் பழங்களாகும். இந்த பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறி, வயிறும் சுத்தமாக இருக்கும்.