இந்தியாவின் வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் தனித்துவமான வைர டிசைன்களை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்குகிறது.
சர்வதேச சந்தைகளில் சூரத்தில் இருந்து வரும் நகைகளுக்கு என்றுமே தனிமதிப்பு இருக்கும்.
உலகின் 90 சதவிகித வைரங்கள் இந்த நகரத்தில் இருந்துதான் வெட்டப்பட்டு, மெருகூட்டப்படுகிறது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியால் உருவாக்கப்பட்ட பற்களில், வைரக்கற்களை பதித்து சூரத்தில் விற்பனை செய்து வருகின்றனர், நகை வியாபாரிகள்.
அதாவது இயற்கை வைரங்கள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரங்கள் மற்றும் மொய்சனைட் (Moissanite) போன்றவற்றைப் பதித்து பற்களை உருவாக்கியுள்ளனர்.
வைரங்களுடன்கூடிய பல் செட் ரூ.25 முதல் 40 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதில் 16 பற்கள் உள்ளன. இவற்றில் தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர 2,000 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப பற்களின் வடிவம் மற்றும் டிசைன் மாற்றியமைக்கப்படுகிறது. பிஸ்டல், AK - 47, பட்டாம்பூச்சிகள் போன்ற டிசைன்களிலும் பற்கள் வடிவமைக்கப் படுகிறது. சாதாரணமாகப் பயன்படுத்தும் பற்களைப் போலவே இவற்றையும் எந்தத் தொந்தரவும் இன்றி கழற்றி அணிய முடியும்.
ஸ்பெஷல் பல் செட்கள் வெள்ளி மற்றும் 10, 14 மற்றும் 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்படுகின்றன. சில்வர் மற்றும் மோன்சோனைட் (monzonite) வைரங்களால் உருவாக்கப்பட்ட 6 பற்கள் 1 லட்சம் வரை விற்கப்படுகிறது.
வைரம் பாதிக்கப்பட்ட பற்கள்...தங்கம் மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தால் செய்யப்படும் பல் செட்கள் ரூ.5 லட்சம் வரை விற்கப்படுகிறது. பிரீமியம் வகை பற்கள் தங்கம் மற்றும் வைரத்தைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்படுகிறது.
இவை ரூ.25 லட்சம் முதல் 40 லட்சம் வரை விற்கப்படுகிறது. இவற்றில் பயன்படுத்தப்பட்ட தங்கம் மற்றும் வைரத்தின் அளவைப் பொறுத்து இந்தத் தொகையானது மாறுபடும் என்று தெரிவித்துள்ளனர்.