கடலூர்: ஃபெஞ்சல் புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து தன்னால் முடிந்த உதவியை KPY பாலா செய்திருக்கிறார். அவரின் இந்த செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடலோர மாவட்டங்கள் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் இந்த பாதிப்பை சந்தித்திருந்தன. இந்த ஆண்டு வட தமிழக மாவட்டங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதாவது வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நவ.30ம் தேதி மரக்காணம் அருகே கரையை கடந்தது. புயல்கள் கரையை கடந்த பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிடும்.
ஆனாலும் போகும் வழியெல்லாம் மழையை கொடுத்துக்கொண்டே செல்லும். இது நகரும் வேகம் அதிகம் என்பதால் மழையின் பாதிப்பு அவ்வளவாக இருக்காது. ஃபெஞ்சல் புயல் விஷயத்தில் இந்த கணிப்புகள் பலிக்கவில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஃபெஞ்சல், வழக்கத்தை விட மெதுவாக நகர்ந்து, போகும் வழியில் கடுமையான மழையை கொடுத்துக்கொண்டே சென்றது.
அதாவது டிச.1ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ., புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ., திருக்கனூரில் 43 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ., நேமூரில் 35 செ.மீ., புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ., செம்மேடில் 31 செ.மீ., வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ., விழுப்புரத்தில் 27 செ.மீ., செஞ்சி, கெடாரில் 25 செ.மீ என மழை பதிவாகியிருந்தது.
இதனால் விழுப்புரத்தின் தென்பெண்ணை மற்றும் மலட்டாற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. வெள்ளம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை துண்டித்தது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தென்மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக எழும்பூர் வந்து சேர வேண்டிய ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக வந்து சேர்ந்தன. இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்றுதான் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் வடிந்திருக்கிறது. வாகனங்கள் வழங்கமான பயணத்தை தொடங்கியுள்ளன.
மறுபுறம் கிராமங்களில் இன்னும் முழுமையாக வெள்ள நீர் வடியவில்லை. எனவே மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் KPY பாலா பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5000 என உதவி செய்திருக்கிறார். மேலும் அவரால் முடிந்த அளவுக்கு உணவு பொருட்களையும் வழங்கியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர்,
“வெள்ள பாதிப்பை வீடியோ எடுத்து பெண் ஒருவர் உதவி கேட்டிருந்தார். இரவே வரலாம் என்று பார்த்தேன். ஆனால் முடியவில்லை. எனவே என்னால் முடிந்த பொருட்களை வாங்கிக்கொண்டு காலையில் வந்திருக்கிறேன். நிவாரண பொருட்களுடன் வீட்டிற்கு ரூ.5000 பணத்தையும் கொடுத்திருக்கிறேன். நான் பெரிய ஆள் கிடையாது. இப்போது எட்டியுள்ள உயரத்திற்கு காரணம் மக்கள்தான்.
எனவே அவர்களுக்கு நான் உதவி செய்கிறேன். நான் கொடுத்த பணம் அவர்களுடைய 10 சம்பளம் என்று கூறினார்கள். சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. உதவிதான் செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.2000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage