மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி மடோன் அஸ்வினின் மேக்கிங்குக்கும் அப்ளாஸ் கிடைத்தது.
வசூலில் சூப்பர்: விமர்சன ரீதியாக ஒருபக்கம் பலத்த வரவேற்பு கிடைக்க மறுபக்கம் வசூல் ரீதியாகவும் மாவீரனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. இதுவரை படமானது 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருப்பதோடு கூடிய விரைவில் நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடும் என்ற நம்பிக்கையிலும் படக்குழு இருக்கிறது.
சக்சஸ் மீட்: படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது உறுதியாகிவிட்டதால் நேற்று மாவீரன் படக்குழு சக்சஸ் மீட்டை வைத்தது. இதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மடோன் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ""போன படம் சரியாக போகாததால் இந்த மாவீரனின் வெற்றி ஸ்பெஷல் அல்ல. மிஸ்டர் லோக்கலுக்கு பிறகு வந்த நம்ம வீட்டுப் பிள்ளை ஹிட்; ஹீரோவுக்கு பிறகு வந்த டாக்டர் ஹிட்; பிரின்ஸுக்கு பிறகு வந்த மாவீரன் இப்போ ஹிட்.
வரும் போகும்: வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையில் வரும் போகும். சினிமாவில் நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான். அது, Success is a Journey Not a Destination என்பதுதான். அதனால் இதனை நான் ஒரு பயணமாக மட்டும்தான் பார்க்கிறேன். இதில் நாம் என்ன கத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது" என்றார்.
அயலான் அப்டேட்: மேலும் அயலான் குறித்து பேசிய அவர், "அயலான் திரைப்படம் நிச்சயம் புதிய கதைக்களமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாவீரன் படம் போல் வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை அமைக்கும் வேலையையும் தொடங்கிவிட்டார்"" என்றார். அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அயலான்: இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். பல வருடங்களுக்கு முன்னரே ஷூட்டிங் முடிந்தாலும் பட ரிலீஸில் தாமதம் ஏற்பட்டது. அதுகுறித்து படக்குழு வெளியிட்டிருந்த விளக்கத்தில், அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கவே இந்த தாமதம். பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராஃபிக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் உள்ளது.
இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அயலானில் வரும் வேற்றுகிரகவாசி கேரக்டர் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக்கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அயலான் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது.