Oppenheimer திரை விமர்சனம் : உலகம் முழுதும் குறிப்பிட்ட சில இயக்குனர்களுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் Oppenheimer படத்தை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன் அவர்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.
பல்வேறு வெற்றி திரைப்படங்களை அறிவியல் பூர்வமான கதை நகர்வுகள் கதை காட்சி ஆகியவற்றை ரசிகர்களின் எண்ணத்திற்கு ஒரு படி மேல் சென்று காட்சிப்படுத்தக் கூடியவர் இயக்குனர் நோலன்.
அந்த வகையில், தற்பொழுது நிஜ கதை ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கக்கூடிய படங்களில் கூடுமானவரை கிராபிக்ஸ் காட்சிகளை தவிர்ப்பது தான் இவருடைய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பை மையம் கருவாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் எப்படி படமாக்க போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்தின் உச்சத்தில் இருந்தனர்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரிலீஸ் ஆகி இருக்க கூடிய இந்த Oppenheimer திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா..? என்பதை பார்க்கலாம்.
அறிவியல் விஞ்ஞானியான Oppenheimer ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு உதவும் விதமாக தன்னுடைய தாய் நாடான அமெரிக்காவுக்கு துரோகம் செய்கிறார் என்று படத்தின் ஆரம்ப காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையாக நடந்த சம்பவங்களை அப்படியே கதையாக எடுத்து இருப்பதால் படத்தை பார்க்கும் பொழுது ஒரு டாக்குமெண்டரியை பார்ப்பது போலவே தெரிகிறது.
இதன் பின்னால் நடந்த உண்மை கதையை தெரியாத நபர்களுக்கு திரைப்படமாக தெரியலாம். ஆனால், உலகம் முழுதும் அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் அதற்கு காரணமான நபர்கள் உள்ளிட்ட விஷயங்களை பற்றி தெரிந்த நபர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு டாக்குமென்டரி உணர்வையே கொடுக்கும்.
இந்த திரைப்படத்தை கிறிஸ்டோஃபர் நோலன் எடுக்க இருக்கிறார் என்றதுமே ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் உலகம் முழுதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
உலக வல்லாதிக்க சக்தியாக இருக்கும் அமெரிக்கா, ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசிய அணுகுண்டை ஞாபகப்படுத்தும் விதமாக இது இருக்கிறது.
இரண்டாம் உலகப்போரை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கும்.. கோடிக்கணக்கானோர் தங்களுடைய உறவுகளை சொந்தங்களை தாய் தந்தையை இழந்த தற்கு காரணமாக இருக்கும்.. இரண்டாம் உலகப்போரை.. ஒரு திரைப்படத்தின் மூலம் நினைவூட்ட நினைப்பது தவறானது என பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பின.
ஆனா, அந்த கண்டனங்களுக்கு எதிராக படத்தில் இயக்குனர் நோலன் காட்டி இருக்கக்கூடிய விஷயங்கள் வேறு விதமாக இருக்கிறது.
குறிப்பாக தங்கள் சொந்தங்களை தாய் தந்தையை மகன் மகளை குடும்பத்தினரை இழந்தவர்களின் வலியை பதிவு செய்யும் விதமாக திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் அமெரிக்க குடியரசுத் தலைவரிடம் Oppenheimer தன் கைகள் கைகளில் ரத்தம் படிந்து விட்டது என்று சொல்லும் இடத்தில் அவர் கர்சிப்பை கையில் எடுத்துக் கொடுப்பது அமெரிக்கர்களையே இயக்குனர் ஒரு நொடி கன்னத்தில் பளார் என அரைந்திருக்கிறார்.
இந்த படத்தில் Oppenheimer-ஆக வரக்கூடிய நடிகர் செலியன் மார்பி நடிக்கவில்லை.. Oppenheimer-ஆகவே வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு அடுத்த ஆஸ்கார் பட்டியலில் இடம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அணுகுண்டு வீசிய பிறகு குற்ற உணர்ச்சியால் கலங்கும் அவருடைய காட்சிகள்.. நான் அணுவை இசையாக உணர்ந்தேன்… அணுகுண்டு வெடிப்பதை இசை போல இருக்கும் என நினைக்கும் காட்சிகளில் எல்லாம் அசத்தலாக நடித்திருக்கிறார்.
அதேபோல அயர்ன் மேன் ராபன் டவுனி ஜூனியரா இது..? இவர் தானா அது.. என்று சில நொடி யோசிக்கும் அளவுக்கு வயதான கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.
படத்தின் பெரும் பகுதி உரையாடல்களாகவே நகர்கின்றது. குறிப்பாக நோலன் திரைப்படங்கள் என்றாலே விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.
ஆனால் இந்த திரைப்படம் முழுதும் கிட்டத்தட்ட முக்கால்வாசி காட்சிகள் உரையாடலாகவே நகர்கிறது.
கண்டிப்பாக ஆக்சன் அதிரடி ஃபேண்டஸி என விறுவிறுப்பான படங்களை எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகத்தின் கருப்பு நாளை பறைசாற்றும் விதமாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடலாம்.