மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் 2 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த சில நாட்களாக பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், மும்பை என பறந்து பறந்து படத்தை புரமோட் செய்த படக்குழு இறுதியாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய திரிஷா, ''படத்தை பார்த்து உங்களது கருத்துக்களை சொல்லுங்க. படத்தைப் பற்றி பயமோ, பதட்டமோ இல்ல. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. மணி சார் ஐ லவ் யூ. என்னை மணி சாரின் குந்தவையாக எப்பொழுதும் நினச்சுப்பேன். புதுமுக நடிகையாக அவருடன் பணிபுரிந்தேன். இப்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இதற்காக நன்றியுள்ளவளாக இருப்பேன்'' என்றார்.
பின்னர் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ''படப்பிடிப்பில் நான் டென்ஷனாகும் போதெல்லாம் ஜெயம் ரவி அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார். திரிஷாவிடம் நீங்கள் எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே இருப்பேன்.
இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி என்றார். இந்த நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அவர் தொடர்ந்து பேச முடியாமல் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார். தொகுப்பாளர் அஞ்சனா அவருக்கு ஆறுதல் கூறினர்.