மனிதர்கள் பொதுவாக பிறரிடம் தொடர்பு கொள்வதற்கு பேச்சை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதை தவிர கத்துவது, அழுவது, சிரிப்பது போன்ற பல்வேறு நடத்தைகளின் மூலமாகவும் நாம் நினைப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம். சிரிப்பு என்பது நம்முடைய உணர்வை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு வெளிப்பாடு. சிரிப்பு என்பது பிறருடைய உடல் மற்றும் மனநலனுக்கு ஒரு இயற்கையான தீர்வாகவும் அமைகிறது.
சிரிக்கும் பொழுது நம்முடைய ஒட்டுமொத்த உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு உணர்வு கிடைக்கிறது. நல்ல ஒரு சிரிப்பு உங்களுடைய டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தை போக்கி 45 நிமிடங்கள் வரை உங்களுடைய தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்கும். சிரிப்பு நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவிக்கிறது. இது மன அழுத்த ஹார்மோன்களை சீராக்கி கார்டிசால் அளவுகளை குறைக்கிறது. இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடு மேம்பட்டு, தொற்றுகளை எதிர்த்து சண்டையிடும் ஆன்டிபாடிகள் அதிகமாகிறது. இதனால் நோய்களுக்கு எதிராக நம்முடைய திறன் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சிரிப்பு மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியிடுவதை அதிகரிக்கிறது.
எனவே சிரிப்பு நமக்கு எப்படி உதவுகிறது?
சத்தமாக வாய் வீட்டு சிரிப்பதன் மூலமாகவோ அல்லது புன்சிரிப்பாக இருந்தாலும் அது உங்களுடைய ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரித்து, எண்டார்பின்கள் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகமாக வெளியிட ஆரம்பிக்கிறது. இது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியையும், ஓய்வு உணர்வையும் அளிக்கிறது. மேலும் சிரிப்பு உடலில் உள்ள டென்ஷன் மற்றும் அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுத்த ஹார்மோனை குறைப்பது ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் சிரிப்பு உங்களுடைய எதிர்மறையான எண்ணங்களை அழித்து, நேர்மறையான உணர்வுகளை அதிகரிக்கும். இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை மேம்படும். சிரிப்பு உங்களுடைய இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் சிரிக்கும் போது உங்களுடைய உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உங்களுடைய உடல் மற்றும் மனதிற்கு ஒரு வொர்க்கவுட் போல செயல்படுகிறது.
தினமும் அதிகமாக சிரிப்பதற்கு உதவும் வழிகள் ஏதேனும் உள்ளனவா?
நமக்கு பிடித்தமான நபர்களுடன் நேரத்தை செலவு செய்யும் பொழுது நம்மை அறியாமலேயே நாம் அதிகமாக சிரித்து இருப்போம். மேலும் காமெடி திரைப்படங்களை பார்ப்பது அல்லது புத்தகங்களை வாசிப்பது போன்றவையும் உங்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும். விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது தவிர சிரிப்பதற்கு ஒரு சில லாஃப்ட்ர் கிளப்புகள் உள்ளன. இதில் நீங்கள் சேர்ந்து விட்டால் தொடர்ச்சியாக மற்றும் மனசார எப்படி சிரிக்கலாம் என்பதை அங்கு இருப்பவர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
Also Read | பிரேக்கப் வலியை மறக்க வேண்டுமா..? உங்களுக்கான 5 டிப்ஸ்..!
மன நலனுக்கு சிரிப்பு என்ற சிறந்த மருந்து
சிரிப்பு உண்மையில் ஒரு வலிமையான மருந்து. இது ஆரோக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மனநிலையை மேம்படுத்தி, வலியை குறைத்து, சிரிப்பு மன அழுத்தத்தால் ஏற்படும் தீங்குகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் கோபமாக இருக்கும் போது நீங்கள் சிரித்து விட்டால் உடனடியாக உங்களுடைய கோபம் குறைந்துவிடும். பிறரை மன்னிக்கும் உணர்வு அதிகமாகும்.
சிரிப்பு உங்களுடைய நுரையீரலை வலுப்படுத்தும்
சிரிக்கும் பொழுது நீங்கள் அதிக ஆக்ஸிஜனை உட்கொள்வீர்கள். இது உங்களுடைய இதயம், நுரையீரல்கள் மற்றும் தசைகளை தூண்டும். மேலும் மூளை அதிக மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். எண்டார்பின்கள் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியிடப்படும் பொழுது கார்ட்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் குறையும். பலர் நாள்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மனசோர்வை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு சிரிப்பு என்பது மன அழுத்தத்தை குறைத்து, மனசோர்வு மற்றும் பதட்டத்தை போக்கும். மேலும் அவர்களை மகிழ்ச்சியாக உணர வைப்பதற்கு உதவும் சிரிப்பு என்பது இயற்கையான பெயின்கில்லராக செயல்படுகிறது.
நல்ல தூக்கம்
சிரிப்பால் கிடைக்கக்கூடிய மற்றொரு அற்புதமான நன்மை இது. 4 வாரங்களுக்கு வாரத்திற்கு இரு முறை 40 நிமிட சிரிப்பு சிகிச்சையில் ஈடுபட்ட நபர்கள் அவர்களுடைய தூக்கத்தின் தரம் மற்றும் மனநிலையில் நல்ல மாற்றத்தை கண்டதாக ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சிரிக்கும்போது நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல், உங்களை சுற்றி உள்ள நபர்களின் வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறீர்கள். எனவே சிரித்துக் கொண்டே இருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.