“8 கல்யாணம்.. இன்ஸ்டாவில் காதல் வலை.. ” சேலத்தில் கம்பி நீட்டிய கல்யாண ராணி..

post-img

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). பைனான்சியரான இவர் நேற்று மாலை தொளசம்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பியூட்டீசியன் ரசீதாவை காதலித்தேன். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம். 3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5ம் தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். அவரை கண்டு பிடித்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மாயமான ரசீதாவின் சமூக வலைதள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு பெயர்களில் போலியாக கணக்குகளை வைத்துக் கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சொகுசு கார், பைக்குகளில் பியூட்டியாக போஸ் கொடுத்து பலரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும் அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார். ரசீதாவுடன் பழகியதும் மனைவியை விவாகரத்து செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது பெண் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது கணவர் சத்யகணேஷ், ஒரு பெண்ணுடன் (ரசீதா) தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்னை செய்கிறார் எனக்கூறியுள்ளார். அப்புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரசீதா, இதுவரை 8 திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரசீதாவின் போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகியுள்ளது. அதனால், அவர் என்ன ஆனார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Post