சில்க் ஸ்மிதாவை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவை பேச முடியாது. ஏனெனில் அவர் கோலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே அதிகம். தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார்.
சில்க் ஸ்மிதா கால்ஷீட்: சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்துக்கிடந்தது என்பதுதான் உண்மை. குறிப்பாக படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் அனைவருமே படத்தில் சில்க் ஸ்மிதா பாட்டு இருக்கா என கேட்டுவிட்டுத்தான் அந்தப் படத்தை வாங்குவதும்; அப்படி இல்லையென்றால் சில்க் பாட்டு ஒன்ன வைங்க என சொல்வதும் அரங்கேறியது. அந்த அளவு ரூல் செய்தார் சில்க் ஸ்மிதா.
திராவிட பேரழகி: அதேபோல் பாலுமகேந்திரா சில்க் ஸ்மிதாவை திராவிட பேரழகி என அழைப்பார். அவரது மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு முக்கிய வேடத்தையும் கொடுத்திருந்தார். அதேபோல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்திலும் சில்க்கின் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருந்தது. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் அவருக்கு சிறந்த நடிகை இருக்கிறார் என்பதை ரசிகர்களும், திரையுலகினரும் புரிந்துகொண்டார்கள்.
பாராட்டிய எம்ஜிஆர்: அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவுக்கு கேடயம் வழங்கிய எம்ஜிஆர் மேடையில் பேசும்போது சில்க் ஸ்மிதா தொடர்ந்து இந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல பாராட்டுக்களை பெற்று பெரும் புகழை சேர்த்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் பெரும் தனிமையும், வெறுமையும் சூழ்ந்திருந்தது.
அன்புக்கு ஏங்கியவர்: சில்க் ஸ்மிதா பற்றி இப்போது பேட்டி கொடுக்கும் அனைவருமே கூறும் விஷயங்களில் ஒன்று அவர் எல்லோரிடமும் அவ்வளவு அன்போடு பழகக்கூடியவர். ரொம்பவே வெகுளித்தனமானவர் என்பதுதான். அன்புக்கு ஏங்கிய சில்க் ஸ்மிதா சிலரிடம் ஏமாந்த கதையும் இருப்பதாக அவருடன் பழகியவர்கள் தொடர்ந்து கூறுவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நடிகர் இவர்தான்: சில்க் ஸ்மிதா கடந்த 1996ஆம் ஆண்டு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் நடிப்பதற்கு அத்தனை ஹீரோக்கள் போட்டிப்போட்டனர். ஆனால் சில்க்கின் இறுதிச்சடங்கில் ஒரே ஒரு நடிகரை தவிர்த்து வேறு எந்த நடிகரும் கலந்துகொள்ளவில்லை. அவர் அர்ஜுன். இதுகுறித்து பத்திரிகையாளர் தோட்டா தோட்டா பாவாநாராயணா கூறுகையில், "சில்க்கின் இறுதிச்சடங்குக்கு திரையுலகிலிருந்து அர்ஜுன் மட்டும்தான் வந்தார்.
ஒருமுறை அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா, 'நான் இறந்துபோனால் என் சாவுக்கு வருவியா நீ' என கேட்டார். என்ன இது பேச்சு என சொல்லிவிட்டு அர்ஜுன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சில்க் அப்படி சொன்ன சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார். இதனால் ரொம்பவே வேதனை அடைந்த அர்ஜுன் சில்க் ஸ்மிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்" என கூறியிருக்கிறார்.