பகீர் கிளப்பும் கோவை மேம்பாலங்கள்.. உக்கடத்தை தொடர்ந்து அவிநாசி மேம்பாலம்.. நடந்தது என்ன?

post-img

கோவை: கோவை உக்கடம் மேம்பாலத்தை தொடர்ந்து அவிநாசி சாலை மேம்பாலத்தின் மேல்பகுதியில் இருந்து பெரிய அளவிலான கான்கிரீட் துண்டு கார் மீது விழுந்திருக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் என பல்வேறு தேவைக்காக இங்கு வருகின்றனர். கேரள மாநிலத்துக்குச் செல்வோர், ஊட்டி செல்வோர் என அனைத்து மக்களும் கோவையைக் கடந்தே செல்ல வேண்டும்.

அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாக மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் பிரதான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலையில் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் என பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
கோவை மாவட்டத்தின் முக்கியப் பேருந்து நிலையங்களில் உக்கடம் பேருந்து நிலையமும் ஒன்று. பொள்ளாச்சி சாலைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம், பாலக்காட்டுக்குச் செல்ல முக்கிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உக்கடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சமீபத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், உக்கடத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் பிரச்னை சீரடைந்துள்ளது. இந்நிலையில், உக்கடம் மேம்பாலத்தில் கரும்புக்கடை அருகே இன்று லேசான விரிசல் ஏற்பட்டு சாலையில் மண் துகள்கள் விழுந்துள்ளது.

சுமார் இரண்டடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாலம் பயன்பாட்டுக்கு வந்து 4 மாதங்களே ஆகிய நிலையில், மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாலத்தின் மேல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரிப்சீல் எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட் (Strip seal Expansion Joint) நல்ல முறையில் உள்ளது.
பாலத்தின் கீழ்பகுதியில் தெர்மாகோல் அட்டை வைத்து டெக்ஸ்லாப் கான்கிரீட் போடப்படும் பொழுது மீதமுள்ள சிமெண்ட் கலவை தெர்மாகோல் அட்டைக்கு கீழ்ப்பகுதியில் ஒட்டி இருந்ததால் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பாலப்பகுதியில் உள்ள கட்டுமானங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது.

இந்நிலையில், உக்கடத்தை தொடர்ந்து அவிநாசி மேம்பாலத்தில் இருந்து பெரிய அளவிலான கான்கிரீட் துண்டு ஒன்று பெயர்ந்து காரின் மீது விழுந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து கார் மீது விழுந்துள்ளது. ஹோப்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது, கார் மீது கட்டுமானத்தின் மேல் பகுதியிலிருந்து பெரிய கான்கிரீட் துண்டு பெயர்ந்து விழுந்துள்ளது. இதில், காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து, பீளமேடு காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Post