’நல்ல கதை வந்தால் காமெடியனாகவும் நடிப்பேன்’ - ஓபனாக பேசிய சந்தானம்

post-img

நடிகர் சந்தானம் நடிப்பில் வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னி கிளப்பில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியதாவது, டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும். அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருக்கிறது.

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா? தோசை வேண்டுமா? என்பது போல இருக்கிறது.நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன்.

இதே போல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது சிறப்பு.

தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்ததாகவும் காலையில் ஒயின் ஷாப் போய் கட்டிங் போடுகிறவர்கள் பற்றி கேட்டால் என்ன நினைப்பார்கள் , காலையிலேயே நான் கட்டிங் சாப்பிட்டு வந்ததாக நினைப்பார்கள். ப்ரொடியூசர் சரக்கை பற்றி பேசினால் என்ன நினைப்பார் எனவும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

Related Post