தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு சூப்பரான அப்டேட்டை இந்த படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,
நா ரெடி' என்ற பாடல் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அது தொடர்பான போஸ்டரையும் இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக போஸ் கொடுக்கிறார்.
அதேபோல வாயில் புகையும் சிகரெட்டையும் வைத்துள்ளார். ஏற்கெனவே பட போஸ்டர்களில் சிகரெட் புகைக்கும் நடிகர்களுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது வெளியான லியோ போஸ்டரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதேபோல விஜய்க்கு பின்னால் பலரும் மதுக்கோப்பையுடன் நடனம் ஆடுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சிகரெட் சர்ச்சையில் விஜய் சிக்குவது இது முதல் முறை அல்ல. துப்பாக்கி பட போஸ்டரில் சுருட்டு புகைப்பது போன்ற போஸ்டரும் அந்த நேரத்தில் கண்டனத்துக்கு உள்ளானது.
பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்காரின் முதல் போஸ்டரிலும் சிகரெட் புகைத்தபடியே விஜய் இருந்தார். அப்போதும் அவருக்கு எதிராக கண்டக்குரல்கள் எழுந்தன. தற்போது மீண்டும் சிகரெட் போஸ்டரால் பேசுபொருளாகியுள்ளார் விஜய்.