ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தவரும், நடிகருமான ரூஷோ உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தன்னிடம் இருந்து 15 கோடி ரூபாய் பெற்றதாகவும், அந்த பணத்தின் மூலம் சினிமா எடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆர்.கே.சுரேஷை நேரில் ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் துபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.