பிரபல மலையாள இயக்குநர் சித்திக் இன்று காலமானார். நடிகர் விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்', 'காவலன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
கேரளாவை சேர்ந்த இயக்குநர் சித்திக், 1986 ஆம் ஆண்டு 'பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து மோகன்லால் நடித்த 'நாடோடிக்காட்டு' என்கிற படத்திலும் கதை எழுதினார்.
1989ஆம் ஆண்டு ராம்ஜி ராவ் ஸ்பிக்கிங் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, காட் ஃபாதர், வியட்நாம் காலனி உள்ளிட்ட படங்களை இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராகவும் மாறினார் சித்திக்.
தமிழிலும் சூப்பர்ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார் சித்திக். தமிழில் நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோரை வைத்து, பிரெண்ட்ஸ் படத்தை இயக்கினார் சித்திக். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிக்கத்தக்கவை.
மேலும், தமிழில் விஜயகாந்த் பிரபு தேவா நடிப்பில் வெளியான, 'எங்கள் அண்ணா', பிரசன்னா நடித்த 'சாது மிரண்டா', விஜய் நடித்த 'பாடி கார்ட்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் சித்திக்.
இந்நிலையில் நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.