விவசாயிகளுடன் கமல் – எச்.வினோத் சந்திப்பு… புதிய படத்தின் அறிவிப்பு விரைவில்

post-img

கமலுடன், எச். வினோத் இணையும் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக பாரம்பரிய நெல் விவசாயிகளை கமல் மற்றும் எச்.வினோத் சந்தித்து பேசியுள்ளனர். சமூக பொறுப்புள்ள படங்களை அளிப்பதில் மாஸ்டராக இருக்கும் எச். வினோத், இந்த முறை விவசாயம் சார்ந்த படத்தை விறுவிறுப்புடன் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமல் தற்போது இந்தியன் 2 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக தனது 233 ஆவது  படத்தில் எச். வினோத்துடன் இணையவுள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்கைளத் தொடர்ந்து கமலின் படத்தை இயக்கவுள்ளார் எச்.வினோத். அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களை இயக்கிய நிலையில் கமலுடன் எச்.வினோத் இணையவுள்ள படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் பணிகளை வினோத்தும் கமலும் தொடங்கியுள்ளனர்.

விவசாயிகளுடன் கமல், எச்.வினோத்

முதற்கட்டமாக பாரம்பரிய நெல் விவசாயிகளை இருவரும் சந்தித்து உரையாடினர். இதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது அனைத்து படங்களிலும் சமூக பொறுப்புள்ள மெசேஜ்களை, கமர்ஷியல் எலிமென்ட் குறையாமல் வினோத் அளித்து வருகிறார். அந்த வகையில், கமலுடன் இணையும் படத்தில் விவசாயம் சார்ந்த மெசேஜ் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post