தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் வடதமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது. வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதேபோல், திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் மழை பெய்துவருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்றிரவு திடீரென கனமழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், நாலாட்டின்புதூர், திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளில் 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பாச்சூர், புல்லரம்பாக்கம், காக்களூர், தலக்காஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.