நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது.
அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கியுள்ளனர். விஜய் 10:30 மணி அளவில் மண்டபத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களை தேர்வு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்வதில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது. தாம்பரம் தொகுதியில் 492 மற்றும் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்யாமல் 486 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.