கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது. விருது பட்டியலில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன.
அந்த ஆண்டு தேசிய அளவில் கவனம் ஈர்த்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய்பீம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு வெளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த ஜெய்பீம், பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் நடித்த சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யா, கர்ணன் படத்துக்காக தனுஷ், ஜெய்பீம் படத்துக்காக சூர்யா அல்லது மணிகண்டன் ஆகியோரில் ஒருவர் இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறலாம் என கூறப்படுகிறது.
அதே போல ஜெய்பீம் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெறும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மேலும் வெங்கட் பிரபுவின் மாநாடு, சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் ஆகிய படங்களும் தேசிய விருதுகளைப் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் 83, சூர்யவன்சி, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற படங்கள் தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கங்குபாய் படத்துக்காக ஆலியா பட்டும் தலைவி படத்துக்காக கங்கனா ரணாவத்தும் தேசிய விருதுகளை பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள படங்களான நயாட்டு, மின்னல் முரளி ஆகிய படங்களும் இந்த ரேஸில் இணைந்துள்ளன.