ரஜினியின் ஜெயிலர் வெளியான நிலையில், அடுத்து விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை அல்லது மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா தற்போது மலேசியாவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மலேசியாவில் லியோ ஆடியோ லான்ச்:
விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷுடன் இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளார் விஜய். அதேபோல் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லியோவையும் 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். அதன்படி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், லலித் குமார் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. அதனைவிடவும் விஜய்யின் லியோ பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சஞ்சய்தத் பிறந்தநாளில் அவரது ஆண்டனி தாஸ் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து லியோ அப்டேட்ஸ் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், லியோ இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் பட விழாக்கள் பெரும்பாலும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழா மதுரை, கோவை அல்லது திருச்சி என எதாவது ஒரு நகரில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் அதற்கான முன்னேற்பாடாக லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. அதன் காரணமாக லியோ ஆடியோ லான்ச் மதுரையில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடப்பது உறுதியாகியுள்ளது.