நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
இந்தப் படத்தில் ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் - எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது.
அதற்கான தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு உள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் செப்.15-ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கார்த்தி. அவர் படத்தின் கதையை சொல்வது போல பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முன்னணி நடிகர்களே குரல் கொடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அவரின் குரலில் சோழர்களின் வரலாறை கேட்கும் போது அது அனைவரையும் சிலிர்ப்படைய செய்தது.
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மீதுள்ள நட்புக்காக இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததாகவும், இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது அடுத்தபடியாக விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்துக்காக நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.