தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வி ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை ஆட்டம் காண வைத்திருப்பதாக பலர் கூறுகின்றனர். அதேசமயம் விஜய்யின் படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலிப்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சையும் ஆரம்பித்திருக்கின்றனர். எனவே ரஜினி ரசிகர்கள் மல்லுக்கு இறங்கியுள்ளனர்.
ஜெயிலர்: இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது நாளை பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
திருவிழாக்கு தயாரான ரசிகர்கள்: ஜெயிலர் படத்தின் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட தயாராகியிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.அதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் மிகத்தீவிரமாக செய்துவருகின்றனர். நாளை தலைவர் தரிசனத்தை பார்த்துவிட்டு அவர் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என நாங்கள் பேசுவோம். அந்த அளவுக்கு படம் இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் தங்களது மனதுக்குள் விதைத்திருக்கின்றனர்.
டிக்கெட் புக்கிங்கில் மாஸ்: படத்துக்கான டிக்கெட் புக்கிங் மாஸாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஏகப்பட்ட திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக பெங்களூரில் ப்ரீ புக்கிங்கில் கேஜிஎஃப் 2 சாதனையை ஜெயிலர் முறியடித்துவிட்டதாக பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம் வாய்ந்த படம்: ஜெயிலர் படம் ரஜினிகாந்த்துக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. ஜெயிலர் ஹிட்டின் மூலம் தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விக்கு பதிலடி கொடுக்க ரஜினியும், பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பதிலடி கொடுக்க நெல்சன் திலீப்குமாரும் காத்திருக்கின்றனர். பதிலடி கொடுப்பார்களா என்பதற்கான விடை நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.
இமயமலை பயணம்: நிலைமை இப்படி இருக்க ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து இன்று இமயமலை புறப்பட்டு சென்றிருக்கிறார். படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலை சென்றால் அந்தப் படம் மெகா ஹிட்டாகிவிடும் என்பது அவரின் ரசிகர்களுடையே நம்பிக்கை. அந்தவகையில் ஜெயிலரும் மெகா ஹிட்டாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
ரஜினி சொன்னது என்ன?: இமயமலைக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் சிறிது நேரம் பேசிய ரஜினிகாந்த், "இமயமலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன். கொரோனாலாம் வந்ததால் நான்கு வருடங்களாக அங்கு செல்ல முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.