ஆசிரியரை கடத்தி கட்டாய கல்யாணம்.. துப்பாக்கி முனையில் தாலி கட்டிய சம்பவம்!

post-img
பீகாரில் இளம் பெண்ணுடன் வலுக்கட்டாயமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து ஏமாற்றியதாகக் கூறி, துப்பாக்கி முனையில் ஆசிரியரை தாலி கட்ட வைத்த சம்பவத்தின் பின்னணி என்ன? பீகார் மாநிலம் பெகுசராய் நகரைச் சேர்ந்தவர் அவ்னிஷ் குமார். இவர் ரஜோராவில் தங்கி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் தனது அக்கா வீட்டில் தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி குஞ்சன் என்பவருடன் பழகியுள்ளார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி ஜோடியாக உலாவியுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் அவ்னிஷ் குமார் வெற்றிபெற்று, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அரசு வேலை கிடைத்ததும் காதலியுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்னிஷ் குமார் பள்ளிக்கு செல்லும் போது, இரு கார்களில் வந்த கும்பல் அவரை வழிமறித்து கடத்தியுள்ளது. பின்னர், அருகில் உள்ள கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தனது காதலி குஞ்சன் மணக்கோலத்தில் இருப்பதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ‘பகத்வா விவா’ என்ற பெயரில் காதலியை, வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய அவரது உறவினர்கள் ஆசிரியரை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியரை, அடித்து உதைத்து துப்பாக்கி முனையில் தாலி கட்ட வைத்துள்ளனர். இதையடுத்து, திருமணமான கையுடன் அவ்னிஷ் குமார், தனது வீட்டிற்கு சென்றதும் அவரது காதலியை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதேவேளையில், ஆசிரியர் அவ்னிஷ் தன்னை கடத்தி, இளம் பெண்ணுடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இருதரப்பு குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Bihar’s own RAKSHASA VIVAH Bro got govt teacher job and brides biradars kidnapped him and got him married pic.twitter.com/i0JSl8Xy0K காதலித்து ஏமாற்றியதாகக் கூறி, இளம்பெண்ணுடன் வலுக்கட்டாயமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு துப்பாக்கி முனையில் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இதுபோன்று மணமகன் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. நடப்பாண்டு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மணமகன் கடத்தல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் அட்ரங்கி ரே. பாலிவுட் படமான இதிலும், தனுஷை கடத்தி வலுக்கட்டாயமாக நாயகி சாரா அலிகானுக்கு திருமணம் முடித்து வைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். தற்போது இக்காட்சி நிஜத்திலும் அரங்கேறியுள்ளது.

Related Post