ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோனி சீதை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி துண்டு போட்டு அனுமனுக்கு சீட் ஒதுக்கியது, அனுமனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்கு ஒரு பெண் பூஜை செய்தது, குரங்கு வந்து படம் பார்த்ததால் அனுமன் வந்துவிட்டார் என ரசிகர்கள் ஆராவாரம் செய்தது என ஒரே ரகளையாக சென்றது படம் ரிலீஸான முதல் நாள்.
ராவணனுக்கு வந்த சோதனை: பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்தை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸை அவர்கள் கடுமையாக விமர்சித்து இதற்காகவா பல கோடி ரூபாய் செலவு செய்து இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்தனர். அதிலும் ராவணனுக்கு பத்து தலைகளை கிராஃபிக்ஸில் டிசைன் செய்திருந்த விதத்தை ரொம்பவே கிண்டல் செய்தனர்.
படக்குழு முடிவு: படம் ஒருபக்கம் விமர்சன ரீதியாக அடிவாங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் புதிய சர்ச்சை ஒன்று எழுந்தது. அதாவது படத்தில் ராவணன் பற்றி அனுமன் பேசுவது போன்ற வசனத்துக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களின் எண்ணங்களையும் அவர்களது உணர்வுகளை மதித்து படத்தில் இருக்கும் வசனங்களை மாற்றியமைப்பதாக படக்குழு அறிவித்தது.
யோசித்த பிரபாஸ்: இந்நிலையில் ராமராக நடிக்க பிரபாஸ் முதலில் யோசித்தது தெரியவந்திருக்கிறார். படத்தின் இயக்குநர் ஓம் ராவத் அளித்த பேட்டியில், "பேண்டமிக்கின்போது பிரபாஸிடம் நான் பேசினேன். முதலில் அவர் நான் என்ன ரோல் செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றார். உடனே நான் நீங்கள் பிரபு ஸ்ரீராமாக நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவரோ அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா. இது எப்படி நடக்கும் என யோசித்தார்.
நேரில் சந்திக்க ஹைதராபாத் சென்றேன்: ஒரு பெரிய ஸ்டார்ரிடம் ஸூம் மீட்டிங்கில் விளக்கக்கூடாது என்று நினைத்து அன்றைய தினமே மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு சென்றேன். நேரில் அவரை சந்தித்து முழு கதையையும் அவருக்கு சொன்னேன். கதையை கேட்ட அவர் உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார். அவரது ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.