கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னருக்கும், ஒரு பழங்குடி கூட்டத்துக்கும் நடக்கும் யுத்தத்தை மையமாக வைத்து சென்ற மாதம் வெளியானது `யாத்திசை' திரைப்படம்.
அறிமுக இயக்குநர், அறிமுக இசையமைப்பாளர் எனப் புது அணியாக பெரும் முயற்சியை மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக மன்னர் காலத்துக் கதை, வரலாற்றுத் திரைப்படம் என்றாலே பிரமாண்ட செட், உடை, சிகை அலங்காரம் எனப் பெரும் பட்ஜெட் செலவாகும் என்ற நிலையில், குறைந்த செலவில் பெரும் பிரமாண்டத்தை நிகழ்த்தியுள்ளது யாத்திசை படக்குழு. சிறு VFX காட்சி என்றாலே தயங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் 70% மேல் VFX-ன் தேவை இருக்கும் இப்படத்தை குறைவான பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த சவாலான முயற்சி எப்படிச் சாத்தியமானது என்பதைப் படத்தின் காட்சிப் படிம (VFX) இயக்குநர் ரவிக்குமார் ஆனந்தராஜ் உடன் பேசினேன்.
யாத்திசை VFX பணி எவ்வாறு தொடங்கியது, முன்தயாரிப்பு நடவடிக்கைகளாக என்னென்ன செய்தீர்கள்?
"இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ்தான் இம்முயற்சிக்கு முழுமுதற்காரணம். சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலை உடையவர். இப்படத்தைத் தயாரிக்கப்போகிறேன் என்ற முடிவை எடுத்தவுடன், இத்துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் உடையவன் என்பதால் என்னைத் தேர்ந்தெடுத்து, எப்படிச் செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிடச் சொன்னார். அங்கிருந்துதான் இப்பயணம் தொடங்கியது. எந்த ஒரு படத்திற்கும் கிரியேட்டிவ் ஏரியாவான ஸ்கிரிப்ட் லாக் செய்த பிறகு எந்த மாற்றமும் இல்லாமல், Pre Production-ல் வேலை செய்தாலே VFX செலவைக் குறைத்துவிடலாம். இந்தப் படத்திற்கு 40-50 நாள்கள் ஒதுக்கி Pre Production வேலையைத் தெளிவாக முடித்து வைத்துவிட்டோம். எந்த எந்தக் காட்சிகளுக்கு CG தேவைப்படுமோ அதற்கு storyboard, heavy storyboard, படம் என்ன கலர் டோனில் வரப்போகிறது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல் அடிப்படையான அனிமேஷனை வைத்துப் படத்தை முழுமையாகச் செய்து வைத்துக்கொண்டோம். பிறகு ஆக்ஷன் காட்சிகள், சாதாரணக் காட்சிகள் என இரண்டாகப் பிரித்து ஷூட்டிங் செல்வதற்கு முன்னரே படம் எப்படி வரும் என்பதைப் பார்க்கும் 'previz' கையில் வைத்திருந்தோம். அது பெரிதும் உதவியது."
பிரமாண்டங்களின் தேவை இருக்கும்போது பட்ஜெட்டை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தீர்கள்?
"பெரிய படங்களில் எப்போதுமே அனைத்து லென்ஸ்களும் ஷூட்டிங் செட்டிற்கு வந்திருக்கும். பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்கான காசு கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. முறைப்படி முன்னரே ’ஷாட் டிவிசன்’ செய்துவிட்டோம். இன்றைக்கு என்ன லென்ஸ் தேவையோ அதை மட்டும்தான் வாடகைக்கு எடுப்போம். குறிப்பாக தேனி, கம்பம் போன்ற மலைப் பகுதிகளில் ஷூட் நடைபெறும்போது காட்டிற்குள்ளே செல்ல படக்குழுவினர் சிலருக்கே அனுமதி வழங்கப்பட்டது. மிச்சம் இருக்கும் நபர்கள் வெளியே காத்துக்கொண்டு இருப்பார்கள். நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் walkie talkie மூலம்தான் தகவல் பரிமாறிக்கொள்ளப்படும். நாங்கள் Daily Sheet-ல் இந்த சீனுக்கு இந்த கேமரா இத்தனை மணி நேரத்தில் முடிக்கிறோம் என்று முடிவு செய்திருப்போம். அந்த ஷீட் படக்குழுவில் உள்ள அனைவரிடமும் இருக்கும். Walkie-ல் அவ்வாறு ஷூட்டிங் முடிந்தது என்று தகவல் வந்தவுடனே விலையுயர்ந்த லென்ஸ், கேமராக்கள் அனுப்பி வைக்கப்படும். இது பெரும்பாலான செலவைக் குறைத்தது."