தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் நடித்து வெளியான இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன்பின்னர் விக்ரம், கெளதம் இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள்.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இந்தப் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் சென்சாருக்கு சென்ற நிலையில் தற்போது சென்சார் பணிகள் முடிந்து உள்ளது. 2 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.