ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.
இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
இஸ்லாமியராக ரஜினிகாந்த்?: இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். கிட்டத்தட்ட 45லிருந்து 50 நிமிடங்கள் வரை ரஜினி இந்தப் படத்தில் தோன்றுவார் எனவும், அவருக்குரிய கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் அவர் படத்தில் தோன்றவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில்தான் லால் சலாம் படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. இதுதொடர்பான அறிவிப்பை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. மேலும் முதல் ஷெட்யூல் நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
பாராட்டிய ரஜினிகாந்த்: இந்நிலையில் இதுவரை எடுத்த லால் சலாம் படத்தை ரஜினிகாந்த்துக்கு போட்டுக்காட்டினாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதை பார்த்த ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பாராட்டி தள்ளிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி தனது குடும்பத்திலிருந்து இப்படி சிறப்பாக ஒரு இயக்குநர் உருவாகியிருப்பதை நினைத்து அவர் பூரித்துபோயும் இருக்கிறாராம்.
இரண்டாவது ஷெட்யூலில் ரஜினி: விரைவில் தொடங்கவிருக்கும் லால் சலாம் படத்தின் இரண்டாவது ஷெட்யூலில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது காட்சிகளை நடித்து முடிப்பார் என கூறப்படுகிறது. படமானது இந்த வருடத்துக்குள்ளாகவே வெளியாகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.