சூப்பர் கம்பேக்.. ஆனால், நெல்சன் கோட்டை விட்டது எங்கே? ஜெயிலர் விமர்சனம்!

post-img

Rating: 3.5/5

இயக்குநர்: நெல்சன் திலீப்குமார்

நடிகர்கள் :ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில்,மோகன் லால், விநாயகம், ஜாக்கி ஷெராஃப்

சையமைப்பாளர்: அனிருத்

சென்னை: (ஜெயிலர் விமர்சனம்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமாக உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜெயிலர் கதை: திகார் சிறையில் கர்ஜித்துக் கொண்டிருந்த ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் ரிட்டயரான பின்னர் மனைவி, பேரன் என யாருமே மதிக்காத நிலையில், பாட்ஷா படத்தில் அப்பாவியாக வரும் ஆட்டோக்காரன் போல, உலகமே தெரியாமல் குடும்பமே கதி என்று இருக்கிறார்.

இந்த நேரத்தில் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த தலைவன் விநாயகன் போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியனின் மகன் வசந்த் ரவியை கொன்று விட்டதாக வரும் தகவலை அடுத்து விநாயகன் ஆட்களை போட்டுத் தள்ள ஆரம்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒரு கட்டத்தில் விநாயகனையும் முடித்துக் கட்ட கிளம்பி வர அப்போது அவரது மகனை உயிரோடு பிணையக் கைதியாக வைத்திருக்கும் விநாயகன் விலை மதிப்பு மிக்க க்ரீடம் ஒன்றை கடத்தும் பெரிய டாஸ்க்கை முத்துவேல் பாண்டியனிடம் ஒப்படைக்கிறது. அந்த க்ரீடத்தை முத்துவேல் பாண்டியன் திருடினாரா? தனது மகனை மீட்டாரா? விநாயகத்தை போட்டுத் தள்ளினாரா என்பது தான் கிளைமேக்ஸ்.

அடுக்கடுக்கான ட்விஸ்ட்: ஆரம்பத்தில் அப்பாவியான ரிடயர்ட் தாத்தாவாகவே வலம் வரும் ரஜினிகாந்தை யோகி பாபு எல்லாம் கலாய்ப்பது பின்னர், சித்தப்பு சரவணனை கொன்று அவரது பாடியை யோகி பாபுவை வைத்து பாலத்தில் இருந்து தூக்கிப் போடும் இடத்தில் இருந்து தான் ஸ்லோவாக ஆரம்பிக்கும் படமே சூடு பிடிக்கிறது. மகனை காப்பாற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் ஒரு அப்பாவுக்கு கடைசியில் கிளைமேக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட் தான் படத்தின் பலமும் பலவீனமும் என்று சொல்லலாம்.

மாஸ் இன்டர்வெல்: படம் ஆரம்பிக்கும் போது ரொம்பவே ஸ்லோவாக செல்கிறது. நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி ஆரம்பத்தில் அதிகமான ஸ்கோப் இருந்தும் எடுபடாமல் போய் விட்டது. யோகி பாபு இந்த படத்தில் பெரிதாக சிரிக்கவில்லை. பூனையாக இருக்கும் ரஜினி மகன் இறந்து விட்டான் என்று தெரிந்ததும் புலியாக மாறும் காட்சி அதற்கு முன்பாக சிவராஜ்குமாரின் உதவியை நாடி செல்வது, அவர் எப்படி இடைவேளை காட்சியில் முத்துவேல் பாண்டியனான ரஜினிக்கு உதவுகிறார் என்பது மாஸ் இன்டர்வெல் பிளாக்காக வைத்து மிரட்டியிருக்கிறார் நெல்சன்.

கதையில் கோட்டை விட்ட நெல்சன்: அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் மகனுக்காக கமல் எதிரிகளை அழிப்பார் அந்த படத்தின் சில காட்சிகளை நினைவு படுத்துகிறது. அதே போல சிவாஜி நடித்த பழைய படத்தின் டச் சில காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது. பார்த்துப் பழகிப் போன கதையை திரைக்கதை மூலமும் ரஜினி, மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களுக்கான மாஸ் காட்சிகளை வைத்து கூஸ்பம்ப்ஸ் கொடுத்தும் டிக்கெட்டு வாங்கி தியேட்டருக்கு சென்றவர்களை திருப்தியுடன் திருப்பி அனுப்பி இருக்கிறார் நெல்சன்.

பிளஸ்: ரஜினிகாந்த் சிங்கிள் மேன் ஆர்மியாக இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக வில்லன் விநாயகன் நடிப்பு மற்றும் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கிறது. அந்த பத்து ரூபாய் பிச்சை எடுக்கும் சீன் வேறலெவல். அனிருத்தின் பின்னணி இசை ஒட்டுமொத்த படத்தையும் உயிரைக் கொடுத்து தாங்குகிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் டீஏஜிங் காட்சியில் திகார் சிறையில் 15 ஆண்டுகள் இளமையான சூப்பர்ஸ்டாரை நெல்சன் சூப்பராக காட்டியுள்ளார். பீஸ்ட் படத்தில் பண்ணது போல எங்கேயும் சொதப்பாமல் கொண்டு சென்றதே நெல்சன் இந்த படத்தில் செய்துள்ள நல்ல விஷயம். மோகன்லால், சிவராஜ்குமார் நடுவில் ஒரு சீன் வந்து சென்றாலும், கிளைமேக்ஸில் மீண்டும் வந்து கூஸ்பம்ப்ஸ் கொடுப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

மைனஸ்: 100 மார்க்குக்கு ஆன்ஸர் ஷீட் கொடுத்தாலும் 40 மார்க்குக்கு தான் பரீட்சை எழுதுவேன் என இயக்குநர் நெல்சன் தனது சோம்பேறித்தனத்தை ஜெயிலர் படத்தின் கதையில் தெளிவாக காட்டியிருக்கிறார். நீலம்பரி ரம்யா கிருஷ்ணன், மகனாக நடித்த வசந்த் ரவி, தமன்னா போர்ஷன் என அனைத்துமே சுமார் தான். கிளைமேக்ஸில் வைத்த அந்த தங்கப்பதக்கம் ட்விஸ்ட்டும் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.

ஆனாலும், இந்த வயதிலும் தனது ரசிகர்களுக்காக மரண மாஸாக செம ஸ்பீடாக ஸ்க்ரீன் ஸ்பேஸை பிச்சி உதறித் தள்ளியிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை எங்கேயும் மொக்கை செய்யாமல் நெல்சன் நீட்டாக ஸ்டைலாக பவர்ஃபுல்லாக காட்டி ஸ்கோர் செய்து விட்டார். ஜெயிலர் படத்தை தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.


Related Post