மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

post-img

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.

 

20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்துவருவதால் ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான உத்தரவு மாலை இணையதளத்தில் வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

Related Post