மகேஷ் பாபு பர்த்டே.. 48 வயதில் மனுஷன் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா !

post-img

டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகேஷ் பாபுவின் சம்பளம், சொகுசு வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்தவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு லயோலா கல்லூரியில் தான் படித்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அப்பா கிருஷ்ணா நடிப்பில் வெளியான நீடா, போராட்டம் உள்ளிட்ட படங்களிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேஷ் பாபு 1999ம் ஆண்டு வெளியான ராஜகுமாருடு படத்தின் மூலம் ஹீரோவாக டோலிவுட்டில் அறிமுகமானார்.

டோலிவுட் சூப்பர்ஸ்டார்: சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு என்றே தனது திரைப்படங்களில் பட்டத்துடன் டைட்டில் கார்டு போட்டு தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகராக மாஸ் காட்டி வரும் மகேஷ் பாபுவின் 48வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கோலிவுட்டில் விஜய் போல டோலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு தொடர்ந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபுவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

80 கோடி சம்பளம்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு புதிய படங்களுக்கு 80 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டாலே தன்னை வைத்து படம் தயாரிக்க முடியாது என கெத்தாக சொல்லி விட்டு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் மகேஷ் பாபு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பைலிங்குவல் படமாக தமிழிலும் வெளியான ஸ்பைடர் படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

சொத்து மதிப்பு: ஒக்கடு, போக்கிரி, தூக்குடு, பிசினஸ்மேன், ஸ்ரீமந்துடு, பரத் அனி நேனு, மகரிஷி, சரிலேரு நீக்கெவ்வரு, சர்காரு வாரி பாட்டா என பிரம்மாண்ட படங்களில் நடித்து உள்ள மகேஷ் பாபு அடுத்ததாக குண்டூர் காரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். கடந்த 2005ல் நடிகை நம்ரதா சிரோத்கரை திருமணம் செய்துக் கொண்ட மகேஷ் பாபுவுக்கு கவுதம் மற்றும் சித்தாரா என இரு குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு, தியேட்டர் என ஒட்டுமொத்தமாக 256 கோடி சொத்துக்கு அதிபதியாக மகேஷ் பாபு உள்ளார் எனக் கூறப்படுகிறது.

ராஜமெளலி படம்: குண்டூர் காரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்க உள்ளார். அந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 500 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மகேஷ் பாபுவின் சம்பளமும் அந்த படத்தில் அதிரடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Post