லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக வலம் வருகிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை அசலாட்டாக வசூலித்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.
லியோ லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 60 நாட்கள் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு நடந்துவந்த ஷூட்டிங் இப்போது பையனூரில் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்குமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மாஸ்டரில் கலக்கிய லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் முதல்முதலாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ஹீரோவின் முழு பெயரை சொல்லாதது, ஹீரோவுக்கென்று ப்ளாஷ் பேக் இல்லாதது என பல புதுமைகளை புகுத்தியிருந்தார். மேலும் அதுவரை அப்படி ஒரு விஜய்யை பார்த்ததில்லை என அவரது ரசிகர்களும் மனதார பாராட்டியிருந்தனர்.
இப்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினில் கிடைத்த வாய்ப்பு: அதாவது விஜய் நடித்த சச்சின் படத்தில்தான் அவர் நடித்திருக்க வேண்டியது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சச்சின்' படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடக்கிறது எனும் செய்தியை கேட்டு நானும் எனது நண்பர்களும் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.
க்ளைமேக்ஸ் காட்சியில் நண்பர்கள்: அங்கு சச்சின் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விஜய் மற்றும் ஜெனிலியா இடம்பெறும் காட்சிகளில் தனது நண்பர்கள் சிலர் இடம்பெறும் வாய்ப்பு எதார்த்தமாக அமைந்துவிட்டது. ஆனால் அந்தக் காட்சியில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அன்று விஜய்யை நேரில் பார்த்ததே எனக்கு போதுமானதாக இருந்தது" என்றார்.
அடுத்தது என்ன: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பதுதான் பலரின் இப்போதைய கேள்வி. கைதி 2 இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கைதி 2 படத்தின் ப்ராசஸ் நீண்ட நாட்களாக வெயிட்டிங்கில் இருப்பதால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினியுடன் இணைவார் என்றே கருதப்படுகிறது.