கோவை: கோவையில் மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்குச் சென்றவர் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய நிலையில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாட்டம், துடியலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (62). கட்டுமான ஒப்பந்தப் பணியைச் செய்து வரும் தியாகராஜனின் மகள் கீர்த்தனா (வயது 21). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வீட்டிற்கும், கல்லூரிக்கும் சென்று வர வெகுதூரம் என்பதால் கல்லூரியில் உள்ள விடுதியில் கீர்த்தனா தங்கி படித்து வந்தார்.
வார விடுமுறையன்று கீர்த்தனா தனது வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இரு தினங்கள் வீட்டில் இருந்துவிட்டு திங்கள்கிழமை கல்லூரிக்குச் செல்வார். அந்த வகையில், இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கிளம்பி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளார். தனது பெற்றோருடன் விடுமுறை நாள்களை சந்தோஷமாக கீர்த்தனா கழித்துள்ளார்.
இந்நிலையில், கீர்த்தனா சனிக்கிழமை இரவில் பரோட்டா சாப்பிட வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கீர்த்தனாவுக்கு பரோட்டசா வாங்கி கொடுத்துள்ளனர். கீர்த்தனாவும் அதனை சாப்பிட்டுள்ளார். பின்னர், இரவில் தூங்குவதற்காக தனது அறைக்குச் சென்றுள்ளார். மிகவும் சாதாரணமாகவே கீர்த்தனா இருந்துள்ளார்.
கீர்த்தான வழக்கமாக எப்போதும் காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காமலேயே இருந்துள்ளார். அறையை விட்டு வராததால் அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், அப்போது கீர்த்தனாாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வராமல் இருந்துள்ளது. தொட்டு எழுப்பி பார்த்தபோது அவர் எந்தவொரு அசைவும் இல்லாமல் படுத்து கிடந்துள்ளார்.
இதனால், பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனடியாக கீர்த்தனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் கீர்த்தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. ஆசையாக வளர்த்து வந்த மகள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இரவில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage