‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதற்கு முன் இவர் இயக்கிய கே.ஜி.எப் படங்கள் சக்கைப்போடு போட்டதால், சலார் படமும் அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ், மலை போல் நம்பி உள்ள படம் சலார். ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. 'சலார்' படத்தின் டீசர் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். சலார் படத்திற்கான ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.