சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நிராகரித்தது சென்னை நீதிமன்றம். மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொள்ள நீதிபதி அனுமதி அளித்துள்ள நிலையில் விசாரணைக்கு மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக் கூடாது எனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையில், காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜியை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை மற்றும் அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் என்றும், மூன்றாம் தர விசாரணையை பயன்படுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன், செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது எனக் கூறியுள்ள நீதிபதி, காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் இருக்கும்போது தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், வரும் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.