கோவையில் அசத்தப்போவது யாரு சீசன் 2.. எப்போது ? மதுரை முத்து கலகல பேட்டி!

post-img

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் ஜூலை 2ம் தேதி அசத்தப் போவது யாரு சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக காமெடி நடிகர் மதுரை முத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்த அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஸ்டேண்ட் அப் காமெடியை தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்திய முதல் இயக்குநர் என்ற பெருமையை இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ்குமார் பெற்றார்.

இதனிடையே கோவையில் அசத்தப் போவது யாரு சீசன் 2 நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காமெடி நடிகர் மதுரை முத்து நியூஸ் 18 லோக்கல் செய்தித் தளத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், கோவையில் 100க்கும் மேற்பட்ட நகைச்சுவை கலைஞர்கள் இணைந்து அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்துகிறோம். வரும் ஜூலை 2ம் தேதி மாலை 6 மணியளவில் ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 5 மணி நேரம் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மக்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

 

ஈரோடு மகேஸ், தங்கதுரை, ரோபோசங்கர் உட்பட பல கலைஞர்களும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களும் மக்களை மகிழ்விக்க உள்ளனர். நடுவராக நடிகர் ஆர்.சுந்தர் ராஜன் கலந்து கொள்கிறார். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில், இந்த நிகழ்ச்சி அமையும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.

Related Post