விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடலை கேட்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.
இந்நிலையில் விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லியோ படத்தின் அனிமேஷன் ப்ரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் லியோ அனிமேஷன் ப்ரோமோ தமிழ்த் திரையுலகின் தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜூன் மாதம் ஆரம்பம் முதலே விஜய்யின் பிறந்தநாளை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இன்னொரு பக்கம் விஜய்யின் லியோ படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்து அசத்தி வருகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். செம்ம மிரட்டலாக வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல், செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகவுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத ஒரு ப்ரோமோ வீடியோ இணையத்தை கலங்கடித்து வருகிறது. 3டி அனிமேஷனில் உருவாகியுள்ள இந்த லியோ ப்ரோமோவை விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். வால்வோ காரில் தப்பிச் செல்லும் வில்லனை, விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் விரட்டிச் செல்கிறார். ரோல்ஸ் ராய்ஸ் காரின் பின் சீட்டில் செம்ம ஸ்டைலிஷாக அமர்ந்திருக்கும் விஜய் க்யூட்டாக சிரித்தபடி வில்லன்களை வேட்டையாட ரெடியாகிறார்.
ஒருகட்டத்தில் வால்வோ காரை சேஸ் செய்து அதிலிருக்கும் வில்லன்களை சுட்டுத் தள்ளும் விஜய், லியோ டைட்டில் டீசரில் வரும் பெரிய வாளுடன் காரில் இருந்து இறங்குகிறார். மிரட்டலான இந்த 3டி ப்ரோமோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். லோகேஷ் கனகராஜுக்கே சவால் விடும் வகையில் லியோ ப்ரோமோவை கிரியேட் செய்துள்ளனர் ரசிகர்கள். இது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் போஸ்டரில், விஜய் புகைப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தது சர்ச்சையானது. விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா என கேள்வி எழுப்பியிருந்தனர். ஏற்கனவே அழகிய தமிழ் மகன், துப்பாக்கி, சர்கார் படங்களில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அப்போதும் விஜய்க்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.