நெருங்கிய நண்பரான நடிகர் ரகுவரனின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இது எதற்காக என்பது குறித்து ரகுவரனின் தாயார் அளித்துள்ள விளக்கம் கவனம் பெற்று வருகிறது. ரஜினிநடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக மார்க் ஆன்டனி என்ற கேரக்டரில் ரகுவரன் மிரட்டியிருப்பார். தொடர்ந்து இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
ரகுவரன் மறைவுக்கு முன்பாக 2007-இல் சிவாஜி படத்தில் ரஜினியுடன் ரகுவரன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கேரக்டர் ரகுவரனுக்கு அளிக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரகுவரன் தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகருக்கு ரகுவரனிற்கு மாற்றாக இன்னும் யாரும் அமையவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. ரகுவரன் தனது 49 வது வயதில் 2008 மார்ச் 19ஆம் தேதி உயிரிழந்தார். நடிகை ரோகிணியை திருமணம் முடித்த ரகுவரனுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். மதுப்பழக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று மன அழுத்தமும் முக்கிய காரணம் என்று ரகுவரனின் சகோதரர் ரமேஷ்வரன் தெரிவித்திருக்கிறார்.
2008-இல் ரகுவரன் மறைவின்போது அவரது இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்வு அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரகுவரனின் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருடனேயே ரஜினிகாந்த் நீண்ட நேரம் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.
ரகுவரனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காரணம், இப்படி ஒரு நண்பனை, மகா கலைஞனை அந்த நிலையில் தன்னால் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் தான் போகவில்லை என்று ரகுவரனின் தாயார் கூறியுள்ளார்.