மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம். மலையாளம் மட்டும் இன்றி தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ஆர்.கே.நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தியின் ‘சிறுத்தை’ தனுஷின் ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விநாயகன், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. எதற்காக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும். ஊடகங்கள் ஏன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. உம்மன் சாண்டி நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி இதுகுறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.