சென்னை : விஜய் டிவியின் பிரபலமான விவாத நிகழ்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது நீயா நானா நிகழ்ச்சி.
நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத்திற்கு விருதுகளை மட்டுமில்லாமல் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது.
நீயா நானா ஷோவின் புதிய எபிசோட் : விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக நீயா நானா இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். அவரது சரியான தொகுப்பில் இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன் தொடர்ந்து விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன், இருவேறு தரப்பினரின் வாக்குவாதங்களை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறது.
இந்த வாரமும் சிங்கிள் ஃபாதர் என்ற கான்செப்டில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை எதிர்கொண்டது. இதில் சிங்கிள் ஃபாதர் மற்றும் அவர்களின் மகன்கள் இந்த வாக்குவாதத்தில் பங்கேற்றனர். அதில் தன்னுடைய குழந்தைகள், சிறுவர்களாக இருந்தபோது, தன்னுடைய மனைவியை பறிகொடுத்த சிங்கிள் ஃபாதர்கள், அவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அடுத்த திருமணம் குறித்து யோசிக்காத சூழலை விளக்கமாக குறிப்பட்டனர்.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தன்னுடைய மனைவியுடன் சென்றபோது, குடும்பமாக தெரிந்ததாகவும், அதுவே தனியாக சென்றபோது சங்கடங்களை சந்தித்ததாகவும் ஒரு சிங்கிள் ஃபாதர் தெரிவித்தார். மனைவி இல்லையென்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை தடுக்க முடியாது என்று மற்றொரு போட்டியாளர் தெரிவித்தார். தன்னுடைய மகன் சிறுவனாக இருந்தபோது, தன்மீது மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் இருந்ததாகவும் அதனால்தான் தான் மறுதிருமணம் குறித்து யோசிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வப்போது ஒரு சபலம் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும், ஆனால் தன்னுடைய மகனின் நல்வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவை யோசித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மற்றொருவரோ, மற்றொரு திருமணம் செய்துக் கொண்டால், வரும் பெண், தன்னுடைய வாழ்க்கையை யோசித்து வருவார் என்றும், தன்னுடைய வாழ்க்கையை பட்டி, டிங்கரிங் செய்யும் நோக்கம் அவருக்கு இருக்காது என்று தெரிவித்தார்.
அவர்களின் வாழ்க்கையை கொடுக்க முடியாத சூழல் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால், தன்னுடைய மகனின் திருமணத்திற்கு பின்போ, அல்லது பேரக்குழந்தை பிறந்தபின்போ, அதுகுறித்து தான் யோசிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்தரப்பில் பேசிய அவரது மகன், தன்னுடைய அப்பா, கோலம் போடுவதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்வார் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து கோபிநாத் கேள்வி எழுப்பிய நிலையில், தன்னுடைய பெற்றோர் மற்றும் மகன்களை கவனிக்கும் வகையில் அடுத்தடுத்த வேலைகளை செய்யும்போது, தான் இழந்தது அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். ஒரு கட்டத்தில் எதை குறித்தும் யோசிக்கவும் சோகப்படவும் தனக்கு நேரம் இருப்பதில்லை என்றும் தன்னுடைய கண்ணெதிரே தன்னுடைய டாஸ்க்காக இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்யவே தான் முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.