லியோ படத்தில் நடிகர் விஜய் பாடிய நா ரெடி பாடல், யூ-டியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லியோ படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை ஒட்டி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியானது. விஜயின் அரசியல் வருகை குறித்து மறைமுகமாக வெளிப்படுத்தும் வரிகளுடனான இப்பாடல், அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே சமயம், இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில், இப்பாடல் யூ-டியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கி, கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளையொட்டி லியோ படத்தில் அவர் இடம்பெற்ற காட்சிகள் சில க்ளிம்ப்ஸ் ஆக நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஹாரோல்டு தாஸ் என்ற கேரக்டரில் அர்ஜுன் நடித்திருக்கிறார்.
அதற்கு முன்னதாக சஞ்சய் தத்தின் க்ளிம்ஸ் வெளியானது. ஆன்டனி தாஸ் என்ற கேரக்டரில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ளார் சஞ்சய் தத். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.